. -->

Now Online

FLASH NEWS


Wednesday 29 May 2019

188 பொறியியல் படிப்புகளை கைவிடும் 89 பொறியியல் கல்லூரிகள்: 127 முதுநிலை, 61 இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கையை நிறுத்த அனுமதி

மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் தமிழகத்தில் 9 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட 89 பொறியியல் கல்லூரிகள் பி.இ., எம்.இ. உள்ளிட்ட 188 முதுநிலை, இளநிலை பொறியியல் படிப்புகளைக் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்தக் கல்லூரிகளின் முடிவுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலும் (ஏஐசிடிஇ) அனுமதியளித்திருப்பதால், 2019-20 கல்வியாண்டில் இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படமாட்டாது.
மென்பொருள் நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டில் முதல் அரையாண்டுக்குப் பிறகு, மென்பொருள் நிறுவனங்கள் ஏற்றம் கண்டன.

வேலைவாய்ப்புக்கான ஆள்கள் தேர்வையும் அதிகரித்தது. இதன் காரணமாக, பொறியியல் படிப்புகள் மீது மாணவர்களின் கவனம் மீண்டும் திரும்பியிருக்கிறது.
இருந்தபோதும், பி.இ. கணினி அறிவியல், இசிஇ போன்ற கணினி சார்ந்த பொறியியல் படிப்புகள் மீது மட்டுமே மாணவர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
அதேபோல, இளநிலை பொறியியல் படிப்புகளை முடித்தவுடன் மென்பொருள் நிறுவனங்களில் அதிக ஊதியம் கிடைப்பதன் காரணமாகவும், பொறியியல் கல்லூரி ஆசிரியர் பணி வாய்ப்பு அரிதாகிவரும் காரணத்தாலும் எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
இதன் காரணமாக, கணினி சாராத இளநிலை பொறியியல் படிப்புகளை மட்டுமின்றி, முதுநிலை பொறியியல் படிப்புகளிலும் மாணவர் சேர்க்கையை பொறியியல் கல்லூரிகள் முழுமையாக நிறுத்தி வருவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
அதேபோல, 2019-20-ஆம் கல்வியாண்டிலும் தமிழகத்தில் 9 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட 89 பொறியியல் கல்லூரிகள் 188 முதுநிலை, இளநிலை பொறியியல் படிப்புகளைக் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த ஏஐசிடிஇ அனுமதி அளித்திருப்பதோடு, இந்தக் கல்லூரிகளின் பட்டியலை இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது.
127 முதுநிலை படிப்புகள்: அதன்படி, 9 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட 50 பொறியியல் கல்லூரிகளில் 127 முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
அதுபோல 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட 39 பொறியியல் கல்லூரிகள் 61 இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தியுள்ளன.