. -->

Now Online

FLASH NEWS


Tuesday 7 May 2019

20 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு

காஞ்சிபுரத்தில் ‘திருக்குறள் பேரவை’ என்ற அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இந்த அமைப்பு சார்பில் எல்கேஜி முதல் 12 வகுப்பு வரை உள்ள 75 மாணவர்களுக்கு கோடைகால பயிற்சியை அளித்து வருகிறது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ்ஆர்வலர் குறள் அமிழ்தனைநிறுவனராகவும், ஓய்வுபெற்றராணுவ வீரர் கு.பரமானந்தத்தை தலைவராகவும் கொண்ட 7 பேர் கொண்ட உறுப்பினர்களுடன் திருக்குறள் பேரவை என்ற அமைப்பு இயங்கி வருகிறது.

இந்த அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சி அளித்து வருகிறது. ஆண்டுமுழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இலவசமாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கோடை விடுமுறையை ஒட்டி இப்போது தினம்தோறும் 15 திருக்குறள் தூதுவர்களைக் கொண்டு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த 15 பேரும் திருக்குறளை நன்கு அறிந்த தமிழ் சான்றோர்கள் ஆவர். இந்த ஆண்டு இந்த அமைப்புசார்பில் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, கா.மு.சுப்புராய முதலியார் பள்ளி ஆகிய பள்ளிகளில் 75 பேருக்கு பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிகளில் திருக்குறளுடன், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்குச் சைவம், வைணவம் உள்ளிட்டவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சியில் பங்கேற்ற 22 மாணவர்கள் கடந்த 2015-ம் ஆண்டு 1,330 திருக்குறளையும் பிழையின்றி கூறி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ‘திருக்குறள் செல்வர்’ விருது பெற்றனர். இந்த ஆண்டு 15 பேர் இதுபோல் 1,330 திருக்குறளையும் பிழையின்றி கூற பயிற்சி பெற்று வருகின்றனர். இது குறித்து இந்த அமைப்பின் நிறுவனர் குறள் அமிழ்தன், தலைவர் கு.பரமானந்தம் ஆகியோரிடம் கேட்டபோது, ‘‘இந்த ஆண்டு 15 மாணவர்களை விருதுக்கு தயார்செய்து வருகிறோம். இவர்களுக்கு உரிய தேர்வுகள் வைத்து புதுடெல்லி தமிழ்சங்கம் இவர்களது திறனை பரிசோதிக்க உள்ளது. இதைத் தொடர்ந்து இவர்களுக்கு புதுடெல்லியில் விருதும் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் மூலம் இதில் பங்கேற்பவர்களுக்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கை, நல்லொழுக்கம் போன்றவையும் எளிதாக வந்து சேருகின்றன’’ என்றனர்.