. -->

Now Online

FLASH NEWS


Friday 17 May 2019

"எதிர்காலம் மதிப்பெண்களில் இல்லை" - வைரலாகும் கலெக்டரின் மதிப்பெண் சான்றிதழ்

மதிப்பெண்கள் மட்டுமே எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லை எனக் கூறி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் தனது மதிப்பெண் சான்றிதழ்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட சட்டீஸ்கர் மாவட்ட ஆட்சியர் அவானிஷ் சரணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கடந்த 2009ம் ஆண்டு ஐஏஎஸ் ஆக தேர்ச்சி பெற்று தற்போது சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள கவார்தா மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றி வருகிறார் அவானிஷ் சரண். இவர் சில தினங்களுக்கு முன்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'தேர்வு முடிவுகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்' என்ற தலைப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், 'தேர்வு என்பது வெறும் நம்பர்களின் விளையாட்டு மட்டுமே.

உங்கள் திறமையை நிரூபிக்க உலகில் பல இடங்கள் உள்ளன. எனவே தொடர்ந்து முன்னேறி உங்களுக்கான களங்களைத் தேர்ந்தெடுங்கள்' என அவர் தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் பதிவில் அவர் தனது 10ம் மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களையும் இணைத்திருந்தார். இது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

மாவட்ட ஆட்சியர் அவானிஷ், பத்தாம் வகுப்புத் தேர்வில் 44.5 சதவீத மதிப்பெண்களையும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 65 சதவீத மதிப்பெண்களையும் மட்டுமே பெற்றிருந்தார். மேலும் பட்டப்படிப்பில் 60.7 சதவீத மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்தார்.


இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவானிஷ் அளித்த பேட்டியில், 'இன்றையச் சூழலில் மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய எவ்வித தடையும் இல்லை. ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பள்ளி மதிப்பெண்கள் மட்டும் எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லை. மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை என்ற மனநிலையிலிருந்து மாணவர்கள் மாற வேண்டும்,' எனத் தெரிவித்தார்.

மாணவர்களின் நலனுக்காக அவானிஷ் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதற்காக பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Source Puthiya Thalaimurai