. -->

Now Online

FLASH NEWS


Sunday 19 May 2019

குழந்தைகளுக்கு பாசத்துடன் தமிழையும் சேர்த்து ஊட்ட வேண்டும்: துணைவேந்தர் சு.நடராஜன்


குழந்தைகளுக்கு பாசத்துடன், தமிழையும் சேர்த்து ஊட்டி வளர்க்க வேண்டும் என காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக துணைவேந்தர் 
சு. நடராஜன் தெரிவித்தார்.





குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா இலக்கிய வட்டம், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் 2-ஆம் உலகத் தமிழ் குழந்தை இலக்கிய மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துணைவேந்தர் சு. நடராஜன் பேசியது:





இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தமிழ் மொழியின் வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் தமிழின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையை மாற்றுவதற்கு 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முயற்சித்து பயனில்லை. அதற்கு மாறாக, குழந்தை பருவத்திலிருந்து, தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு பாசத்தை மட்டும் ஊட்டி வளர்க்கும்போது, தமிழ் மொழியையும் சேர்த்து ஊட்டுவதற்கு இன்றைய பெற்றோர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தமிழின் இன்றைய நிலையை மாற்றி, அதன் வளர்ச்சி எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் இதுபோன்ற இலக்கிய மாநாடுகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்றார். 
மாநாட்டில் மலேசிய பேராசிரியரும், எழுத்தாளருமான மன்னர் மன்னன் பேசியது: எதிர்கால சந்ததிகளிடம் நற்பண்புகளையும், சிந்தனைகளையும் விதைப்பதற்கு தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மலேசியாவில் 525 தமிழ் பள்ளிகளில் 1 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். 10 ஆயிரம் தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மலேசியாவில் 60 சதவீதம் பேர் தமிழ் பள்ளிகளில் கல்வி கற்கின்றனர். மீதமுள்ள 40 சதவீதம் பேர் சீன மொழியில் கல்வி கற்கின்றனர்.திருக்குறளும், ஆத்திசூடியும் கற்றுக் கொள்வதால், மலேசிய மாணவர்கள் மத்தியில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதானவர்களில் 80 சதவீதம் பேர் தேசிய மொழியில் (மலாய்) கல்வி கற்றவர்கள் என்றும், 20 சதவீதம் பேர் தமிழ் வழியில் கற்றவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.





இந்த நிலை ஏற்படுவதற்கு, தமிழ் மொழியிலுள்ள அறநெறி நூல்களை கற்பித்ததே காரணமாகவும் அமைந்துள்ளது. மலேசியாவில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ்க் குழந்தை மாநாட்டின் பயனாக, தமிழ் மொழி காப்பகம் அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது. அதுபோன்ற பயனை 2-ஆவது மாநாடும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.





நிகழ்ச்சியில் போரசிரியர் கண.சிற்சபேசன், முரசு நெடுமாறன், இளமதி சானகிராமன், ஆல்பர்ட் பெர்னண்டோ, காந்திகிராம பல்கலை. பேராசிரியர்கள் வ.ராசரத்தினம், பா.ஆனந்தகுமார், ஓ. முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.