. -->

Now Online

FLASH NEWS


Saturday 18 May 2019

இலவச, 'லேப் டாப்'கள் விற்கப்பட்டதா? விபரம் கேட்க பள்ளி கல்வித்துறை உத்தரவு







'அரசு வழங்கிய இலவச, 'லேப் டாப்'களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா; விற்று விட்டனரா' என, கணக்கெடுக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, 14 வகையான நலத்திட்ட உதவிகளை, தமிழக அரசு வழங்குகிறது.அதில் ஒன்றாக, பிளஸ் 2 முடிக்கும் மாணவ - மாணவியர் மற்றும் பாலிடெக்னிக் மாணவ - மாணவியருக்கு, இலவச லேப் டாப் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வு முடிந்த பிறகும், பாலிடெக்னிக்குகளில் செமஸ்டர் தேர்வு முடிந்த பின்பும், லேப் டாப்கள் வழங்கப்படுகின்றன. இதன் வினியோகத்தில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.லேப் டாப் பெறும் மாணவ - மாணவியரின் சுய விபரங்கள், ஆதார் எண், 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தள சிறப்பு எண் போன்றவை பெறப்படுகின்றன.இந்த லேப் டாப்களை, மாணவர்களை தவிர, வேறு யாருக்கும் வழங்கக் கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது.எட்டு ஆண்டுகளாக அமலில் உள்ள இந்த திட்டத்தால், மாணவர்களுக்கு ஏதாவது பயன் கிடைத்துள்ளதா என்பதை, ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, லேப் டாப் வாங்கிய மாணவர்களிடம், 15 வகையான தகவல்களை பெற, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களின் பெயர், பள்ளி விபரங்கள், லேப் டாப் வாங்கிய ஆண்டு, மாணவர் தற்போது படிக்கிறாரா, சுய தொழில் செய்கிறாரா, வேலை செய்கிறாரா என்ற விபரம் கேட்கப்பட்டுள்ளது.பள்ளியில் எப்போது, லேப் டாப் வழங்கப்பட்டது; பள்ளியில் படிக்கும் போது வழங்கப்பட்டதா அல்லது படிப்பு முடிந்த பின் வழங்கப்பட்டதா என, கேட்கப்பட்டு உள்ளது.லேப் டாப்பை பயன்படுத்தி பாடம் நடத்தப்பட்டதா; படிப்புக்கு தேவையான சாப்ட்வேர் வழங்கப்பட்டதா; லேப் டாப்பில் உள்ள தகவல்கள் படிப்புக்கு பயன்பட்டதா என்பதையும், மாணவர்கள் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.ஓராண்டுக்குள், லேப் டாப்பில் பழுது ஏற்பட்டதா; மாணவர்கள் தற்போது லேப் டாப்பை வைத்துள்ளனரா; வேறு யாருக்கும் விற்று விட்டனரா அல்லது பழுதாகியுள்ளதா என்ற விபரங்களையும், பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது