. -->

Now Online

FLASH NEWS


Sunday 9 June 2019

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடங்கியது முதல் தாள் தேர்வை 1¾ லட்சம் பேர் எழுதினர்


தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று நடந்த முதல் தாள் தேர்வை 1¾ லட்சம் பேர் எழுதினார்கள். ஆசிரியர் தகுதி 2-ம் தாள் தேர்வு இன்று (ஞாயிறு) நடக்கிறது.


ஆசிரியர் தகுதி தேர்வு


மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும்.


தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.


அந்த வகையில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 12-ந்தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.


471 மையங்கள்


அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் முதல் தாள் தேர்வுக்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், 2-ம் தாள் தேர்வுக்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


ஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 471 தேர்வு மையங்களும், சென்னையில் மட்டும் 28 மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு முறைகேடுகளை தடுக்க 2 ஆயிரம் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு இருந்தனர். தேர்வுக்கான பணிகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் ஏராளமானோர் ஈடுபட்டு இருந்தனர்.


கைக்குழந்தையுடன்...


தேர்வு எழுத வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்திருந்ததை பார்க்க முடிந்தது. சிலர் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்கள் தேர்வுக்கு முன்னதாக குழந்தையை பராமரித்தபடி, படித்து கொண்டு இருந்தனர்.


தேர்வுக்கு சென்றதும், குழந்தையை தந்தையின் பராமரிப்பில் விட்டு சென்றனர். அவர்கள் தேர்வு எழுதி முடித்து மனைவி வரும் வரை குழந்தையை பேணி பாதுகாத்தனர். சில தேர்வர்கள் கடைசி நேரத்தில் தேர்வு அறையை நோக்கி வேக வேகமாக ஓடி வந்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது.


சற்று கடினம்


நேற்று நடந்த முதல் தாள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தேர்வர்கள் வாணிஸ்ரீ, கவிதா, பவித்ரா உள்பட சிலர் கூறியதாவது:-


முதல் தாள் தேர்வில் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தது. உளவியல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் இருந்து வந்திருந்த வினாக்களில் சில வினாக்கள் கடினமாக இருந்தன.


கணிதத்தில் பெரிய கணக்குகளாக கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு பதில் கண்டுப்பிடிப்பதற்கு கடினமாகவும், காலதாமதமும் ஏற்பட்டது. மொத்தத்தில் முதல் தாள் தேர்வு சற்று கடினமாக கேட்கப்பட்டு இருந்தது.


இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


இன்று 2-ம் தாள் தேர்வு


ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது.