. -->

Now Online

FLASH NEWS


Thursday 27 June 2019

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு தொடங்கியதால் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சேர்க்கை குறைவு

தேனி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சேர்க்கை குறைந்துள்ளது என்ற புகார் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் 2019-20-ஆம் கல்வி ஆண்டு முதல் 32 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யுகே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில் பெரும்பாலான அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி.,வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால், அங்கன்வாடி மையங்களில் 3 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சேர்க்கை குறைந்துள்ளது என்ற புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்டச் செயலர் மு.நாகலட்சுமி கூறியது: 3 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் சேர்க்கப்படுவதால், அவர்களுக்கு அங்கன்வாடி மையம் மூலம் வழங்கப்படும் அரசு நல உதவிகள் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
எனவே மழலையர் வகுப்பு தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்களுடன் இணைந்த அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையம் அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் படிக்கும் 3 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை, அங்கன்வாடி மையங்களில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.