. -->

Now Online

FLASH NEWS


Tuesday 4 June 2019

புதிய மாணவர்களுக்கு மாலை மரியாதை வரவேற்பு: கோலாகலமாக துவங்கியது புதிய கல்வியாண்டு

பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் நேற்று, மாணவர்களுக்கு மரியாதை செய்து வரவேற்பு கொடுத்ததால், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அரசு உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தனர்.உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி, தமிழ் ஆசிரியர் பாலமுருகன் ஆகியோர் தொடக்கப்பள்ளிக்கு சென்று, அந்த மாணவர்களை சேர்க்கைக்கு அழைத்தனர்.தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அம்சவேணி, மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து, ஆசி வழங்கி வழி அனுப்பி வைத்தார்.உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


அதன் பின், தாரைதப்பட்டை அடித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்றனர்.புதிதாக ஆறாம் வகுப்பில் சேர வந்த மாணவர்களுக்கு, இனிப்பு கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர்.பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், 'இந்தாண்டு புது வரவாக மாணவர்களை வரவேற்பது மகிழ்ச்சியாக உள்ளது.அரசு தொடக்கப்பள்ளியில் இருந்து, 20 மாணவர்கள், தனியார் பள்ளியில் இருந்து ஆறு மாணவர்கள் என, 26 பேர் சேர்ந்துள்ளனர்.பள்ளிக்கு வரும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையிலும் இது போன்ற வரவேற்பு அளிக்கப்பட்டது.இது பெற்றோரிடமும் பள்ளியின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தும்,' என்றார்.வீடு தேடி அழைப்புஆலாங்கடவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் ஆறு மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி, உதவி ஆசிரியர் சிவராம் ஆனந்த், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், வீடு தேடி சென்று, கல்வி உபகரணங்களை வழங்கினர்.அதேபோன்று, மாணவர்கள் வீட்டிற்கு சென்று சேர்க்கைக்கு அழைப்பு கொடுத்தனர்.பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா நடந்தது. கல்விக்குழு தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார்.புதிதாக வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். விலையில்லா பாட புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கப்பட்டது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வரும் சூழலில், ஒவ்வொரு பள்ளியும் போட்டி போட்டு, சேர்க்கைக்காக வரும் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது பெற்றோரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புத்தகம் வினியோகம்பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், முதல் பருவ பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வினியோகிக்கும் வகையில், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டன.இவை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு வினியோகிக்க வழங்கப்பட்டன.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ஆர்வமாக பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, பாட புத்தகங்களை ஆசிரியர்கள் வினியோகித்தனர்.