. -->

Now Online

FLASH NEWS


Tuesday 16 July 2019

பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்: ஹெச்ஐவி பாதித்த மாணவரை பள்ளியில் சேர்க்க மறுத்த விவகாரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட மாணவரை பள்ளியில் சேர்க்க மறுத்த விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த மாணவர் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரது பெற்றோருக்கு ஹெச்ஐவி தொற்று இருந்ததன் காரணமாக, இந்த மாணவரும் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில், மாணவருடைய தாய் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததை அடுத்து, அவரை வேறொரு ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் உறவினர்கள் சேர்த்தனர். அந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவரை, பத்தாம் வகுப்புக்காக ஆலத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் மீண்டும் சேர்க்க பள்ளித் தலைமை ஆசிரியர் காமராஜை மாணவரின் உறவினர்கள் அணுகி உள்ளனர். மாணவர் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டதை அறிந்த பள்ளித் தலைமை ஆசிரியர் காமராஜ், அவரைப் பள்ளியில் சேர்க்க மறுத்துள்ளார். இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருளரங்கனிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான செய்தி பத்திரிகையில் அண்மையில் வெளியானது.


தாமாக முன்வந்து விசாரணை: இதன் அடிப்படையில், சென்னை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.