. -->

Now Online

FLASH NEWS


Tuesday 9 July 2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது

முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு: பொது பிரிவினருக்கு இன்று தொடக்கம்.


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல்நாளில் சிறப்பு பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 3,968 எம்பிபிஎஸ் இடங்கள், 1,070 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 852 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 690 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு 2019-20-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பின்னர் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 11,741 மாணவர்கள், 19,612 மாணவிகள் என மொத்தம் 31,353 பேர் இடம் பிடித்தனர். இதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 9,366 மாணவர்கள், 16,285 மாணவிகள் என மொத்தம் 25,651 பேர் இடம்பெற்றனர்.


இந்நிலையில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 5 சதவீத இடங்களுக்கு தகுதியான 53 பேருக்கும், விளையாட்டு வீரர்கள் பிரிவில்7 எம்பிபிஎஸ், 1 பிடிஎஸ் இடங்களுக்கு 52 பேருக்கும், முன்னாள் ராணுவ வீரர்கள் பிள்ளைகள் பிரிவில் 10 எம்பிபிஎஸ், 1 பிடிஎஸ் இடங்களுக்கு 558 பேருக்கும் கலந்தாய்வில் பங்கேற்குமாறு அனுமதிக் கடிதம் அனுப்பப்பட்டது. இதில் 81 பேர் பங்கேற்றனர். 46 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் சேர ஆணை வழங்கப்பட்டது. மற்றவர்கள் காத்திருப்போர் பட்டி யலில் வைக்கப்பட்டுள்ளனர். டாக்டர்கள் குழுவினரின் பரிசோதனைக்கு பின்னரே மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.


கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் மற்றும்அவர்களின் பெற்றோர் அமர்வதற்காக மருத்துவமனை வளாகத்தில் பந்தல் போடப்பட்டுள்ளது. குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலி இடங்கள் குறித்து பெரிய திரை மூலம் வெளியிடப்படுகிறது. சிறப்புப் பிரிவில் மீதம் இருக்கும் இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க் கப்பட உள்ளன. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. கலந்தாய்வில் பங்கேற்குமாறு 103 மாணவ, மாணவிகளுக்கு (நீட் மதிப்பெண் 685 முதல் 610 வரை) அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 13-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. 12 மற்றும் 13-ம் தேதிகளில் பிசிஎம், எம்பிசி, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.