. -->

Now Online

FLASH NEWS


Friday 26 July 2019

திருக்குறளை இசை வடிவில் ஒலிக்கும் சாதனம். கை வைத்தால் ஒலிக்கும்

கை வைத்தால் இசை வடிவில் குறளை ஒலிக்கும் சாதனம்..! சமூக ஆர்வலரின் நவீன முயற்சி


நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் புத்தகக் கடை ஒன்றில் சமூக ஆர்வலர் ஒருவரால் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ள சாதனத்தில், கை வைத்தால் திருக்குறள் இசை வடிவில் ஒலித்து, அதற்கான விளக்கமும் அளிப்பது பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.


வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் மறைக்காடர் தேசிகர். இவர் கோயில்களில் தேவாரம் பாடுவது, சமயச் சடங்குகள் சார்ந்த பூஜைகளைச் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவரது மகன் மணி என்கிற சுப்பிரமணியன் (52). பல ஆண்டுகளுக்கு முன்பு ரேடியோ பழுது நீக்கும் கடை நடத்தி வந்த இவர், தற்போது ஸ்கை என்ற பெயரில் செல்லிடப்பேசி பழுது நீக்கும் மையத்தை நடத்தி வருகிறார்.


தந்தையைப்போலவே தேவாரம் கற்றுள்ள இவருக்கு, திருக்குறள் போன்ற படைப்புகளை நவீன வடிவில் மாணவர்களிடையே கொண்டு செல்வதில் ஆர்வம் அதிகம். அந்த வகையில், பழுதடைந்த ரேடியோ, தொலைக்காட்சிப் பெட்டிகளில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் பாகங்களைப் பயன்படுத்தி மின்சாரம் அல்லது பேட்டரியில் இயங்கும் ஒரு சாதனத்தை வடிவமைத்துள்ளார்.


அதன்படி, புத்தகம் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட அதன் உலோக தகட்டின் மீது கை அல்லது விரலை வைத்தால் மொத்தமுள்ள 1,330 திருக்குறளும் ஒவ்வொன்றாக இசைப் பாடல் வடிவில் ஒலிக்கும். பின்னர் அதற்கான விளக்கமும் அளிக்கப்படும்.


ஏற்கெனவே ஒலிப் பேழைகளில் வெளிவந்த பாடல்களை, விளக்கத்தைப் பதிவிறக்கம் செய்து, மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கை வைத்தால் ஒரு குறளும், அதற்கான விளக்கமும் வருவது மாணவர்களை வெகுவாக ஈர்ப்பதாக அமைந்துள்ளது.


வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகே புத்தக நிலையத்தை நடத்தி வரும் தமிழ் ஆர்வலர் நமச்சிவாயம், தற்போது தனது புத்தகக் கடையில் அந்த சாதனத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார். இதை அந்த வழியே பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் ஆர்வத்துடன் பார்த்து, கை வைத்து குறளையும், அதற்கான விளக்கத்தையும் கேட்டு ரசித்துச் செல்கின்றனர்.