. -->

Now Online

FLASH NEWS


Monday 5 August 2019

அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து; இன்ஜி., கல்லூரிகளுக்கு அரசு எச்சரிக்கை

'மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தால், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்' என, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கியுள்ளன.கவுன்சிலிங் வழியாக, 84 ஆயிரம் மாணவர்கள், முதலாம் ஆண்டு படிப்பில் சேர்க்கப்பட்டனர். கவுன்சிலிங் அல்லாமல் நிர்வாக ஒதுக்கீட்டிலும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளனர். புதிய மாணவர்களிடம், இன்ஜினியரிங் கல்லுாரிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன. 

பல கல்லுாரிகள், அரசு நிர்ணயித்ததை விட, அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, தமிழக உயர்கல்வி துறை சார்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் இருந்து, கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, 2017ல் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. கல்லுாரிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து, கட்டணம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு கல்லுாரியும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.சிறுபான்மை அந்தஸ்து பெறாத கல்லுாரிகள், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, ஒவ்வொரு மாணவருக்கும் தலா, 50 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு, தலா, 55 ஆயிரம் ரூபாயும் வசூலிக்க வேண்டும்.

சிறுபான்மை கல்லுாரிகளில், அரசு இடங்களுக்கு, 85 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 87 ஆயிரம் ரூபாயும் கட்டணம் வசூலிக்கலாம். கூடுதலாக, திருப்பி தரும் உத்தரவாதத்துடன், 5,000 ரூபாய் வைப்புத்தொகை வசூலிக்கலாம். 

போக்குவரத்து, உணவு மற்றும் விடுதி கட்டணம் தனியாக வசூலிக்கலாம். இந்த கட்டணத்தில், குழு காப்பீடுக்கான கட்டணமும் அடங்கும்.

ஏதாவது கல்லுாரிக்கு, கட்டணம் போதுமானதாக இல்லை என்றால், அந்த கல்லுாரிகள் உரிய ஆவணங்களுடன், உயர்கல்வி கட்டண கமிட்டிக்கும் மனு அளிக்கலாம். மாறாக, விதிகளை மீறி, அதிக கட்டணம் வசூலிப்பதாக, பெற்றோர் தரப்பில் புகார் அளித்தால், கல்லுாரிகள் மீது விசாரணை நடத்தப்படும்.விசாரணை இறுதியில், சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு அபராதம் விதிப்பதுடன், அங்கீகாரமும் ரத்து செய்யப்படும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.