. -->

Now Online

FLASH NEWS


Tuesday 6 August 2019

மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு



அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 


அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் பதிவு வழங்கப்பட வேண்டும் எனவும், மாணவர்களின் விவரங்கள் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மைய விவரங்களுடன் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளது.


பள்ளி மாணவர்களுக்கான ஆதார் பதிவுப் பணிகளை சிறப்பாக தொய்வின்றி செய்திடும் விதமாகவும், கணிணி விவரப் பதிவாளர்கள் பணியில் இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற வட்டார வள மையத்துக்கு ஒன்று வீதம் ஆதார் பதிவுக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு ஆதார் பதிவு மேற்கொள்ள தயார் நிலையில் நிறுவப்பட்டுள்ளன எனவும் பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.


மேலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து, ஆதார் கருவி மூலம் பதிவு செய்யவேண்டும் எனவும், ஆதார் எண் பதிவு செய்த பிறகு, பதிவு செய்யப்பட்டமைக்கான ரசீது அளிக்கப்பட வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளது.


பதிவு செய்யப்பட்ட விவரங்களை குறிப்பிட்ட காலவரைக்குள் ஆதார் இணையத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண் சம்பந்தப்பட்ட விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரையின் படி மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.


ஆதார் பதிவு, பள்ளி வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் எனவும், முக்கியமாக இதற்கு எந்த வித கட்டணமும் மாணவர்களிடமிருந்து பெறக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆதார் எண் பதிவில் ஏதேனும் மாற்றம் செய்ய்யப்பட வேண்டி இருக்குமானால் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படலாம்.


மேலும் பள்ளி மாணவர்கள் தவிர்த்து, வேறு எந்த தனி நபருக்கும் இம்மையங்களில் சேவை அளிக்கக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளுக்கு மீறி நடந்தால், சம்பந்தப்பட்டவர்களின் மீது குற்றவியல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


ஆதார் எண் பெறப்படாத மாணவர்களை, ஆதார் பதிவு மையத்திற்கு அழைத்து வந்து ஆதார் எண் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 5 வயது மற்றும் 15 வயது மாணவர்களுக்கு புகைப்படம், கைரேகை, மற்றும் கண் கருவிழி பதிவு புதிதாக செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த பணிகளை துரிதமாக செய்யும் பொருட்டு மாவட்ட அளவில் ஆதார் பதிவு கண்காணிப்புக் குழு ஏற்படுத்தவும், தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.