. -->

Now Online

FLASH NEWS


Sunday 18 August 2019

அரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு




அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள் படிப்பதற்காக மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் இரா.சுடலைக் கண்ணன், அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே வாசிப்புத் திறனை மேம்படுத்த பள்ளி வளாகத்தில் நூலகப் பயன்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மேலும் பலப்படுத்தும் வகையில், நூலகங்களில் புத்தகங்கள் படிக்க ஏதுவாக, மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும். நூலகங்களை மேற்பார்வையிட சிறப்பு ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்

அந்த ஆசிரியருக்கு குறைந்த பாடவேளைகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் கிழிக்கப்பட்டால் பொறுப்பாசிரியர் மற்றும் மாணவருக்கு எவ்வித அபராதமும் விதிக்கக் கூடாது. அதற்கு மாறாக சேதமடைந்த புத்தகங்களைச் சரிசெய்ய பள்ளி மானிய நிதியைப் பயன்படுத்த வேண்டும். தினசரி நாளிதழ்கள் வாங்க இந்த நிதியைப் பயன்படுத்தக் கூடாது.

மாணவர்கள் தங்கள் விருப்பப்படி, புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்க வழி செய்வதுடன், ஆண்டுதோறும் பள்ளிகளில் ஏப்ரல் மாதம் தேசிய நூலக வாரம் கொண்டாடப்பட வேண்டும். மாதத்துக்கு ஒருநாள் இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களை தங்கள் படித்த புத்தகம் குறித்து பேச வைக்க வேண்டும். மாவட்ட மைய நூலகங்களுக்குச் சென்று பார்வையிட வைத்தல், முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவியால் நூலகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.