. -->

Now Online

FLASH NEWS


Wednesday 11 September 2019

இன்று ஓணம் பண்டிகை, உருவான கதை தெரியுமா?*



கேரளாவின் 'அறுவடை திருநாள்' பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும், ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக இந்த அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இப்படி சொன்னால் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு தெரியும் ஆனால் மற்ற மாநிலங்களில் அவ்வளவு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அறுவடை திருநாள்

கேரள மாநிலத்தில் 10 நாள் வெகு விமரிசையாக கொண்டாப்படும் ஓணம் பண்டிகையைத் தான். அந்த பகுதி மக்கள் அறுவடை திருநாள் என்றும் அழைக்கின்றனர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா கண்ணுக்கு பல வண்ணங்களாக விருந்தளிக்கும் கலர்புல் திருவிழாவாகும்.

கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையானது எப்படி உருவானது?

ஒரு காலத்தில் கேரளா மாநிலத்தை மகாபலி சக்கரவர்த்தி என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், எந்தவிதமான துன்பமும் இன்றி அனைத்தும் பெற்று நிறைவுடன்வாழ்ந்து வந்தனர். மகாபலி என்றால் மிகவும் திறமைசாலி என்று பெயர். அசுர குலத்தில் பிறந்த மகாபலி மன்னன் சிறப்பாக ஆட்சி செய்து வந்தான்.

மகாபலியின் வேள்வி

இந்த நிலையில் மூவுலகையும் ஆட்சி செய்யும் வகையில் ஒரு வேள்வி நடத்த எண்ணினான் மகாபலி சக்கரவர்த்தி. அந்த வேள்வியின் போது வேண்டி வரும் அனைவருக்கும் கேட்கும் தான தர்மங்களை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தான். அவன் செய்யும் தான, தர்மங்களாலும், மேற்கொள்ள போகும் வேள்வியின் காரணமாகவும் அவனை வெல்ல மூன்று உலகிலும் யாரும் இல்லை என்ற நிலை உருவாகி விடும். அது நமக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்று எண்ணிய தேவர்கள், உடனடியாக திருமாலை அணுகி தங்களை காத்தருளுமாறு வேண்டினர்.

அப்போது திருமால், தான் ஏற்கனவே காச்யபர் என்பருக்கு மகனாக பூமியில் அவரித்து விட்டதாகவும், தக்க சமயத்தில் தேவர்களை காத்தருளுவேன் என்றும் கூறினார்.

பூமியில் 3 அடி குள்ள உருவமாக பூமியில் வாமனராக அவதரித்திருந்த திருமால், ஒரு கையில் தாழங்குடையுடனும், ஒரு கையில் திருவோட்டுடனும், பாதரட்சையுடனும் மகாபலி சக்கரவர்த்தி வேள்வியில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு சென்றார். அப்போது வேள்வியும், தான தர்மங்களும் முடிந்திருந்தது. வேண்டுமென்றே தாமதமாக சென்றார் வாமனர்.

மூன்றடி மண் கேட்டார்

அவரை கண்ட மகாபலி சக்கரவர்த்தி, தான தர்மங்கள் அனைத்தும் முடிந்து விட்டனவே என்று கூறியபோதும், மகாபலியே எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம். இந்த உலகத்தில் 3 அடி மண் மட்டும் போதும் என்று கேட்டார். அவரது வேண்டுதலை தட்ட முடியாத மகாபலி வாமனர் கேட்ட தானத்தை கொடுக்க முன் வந்தார்.

ஆனால் அசுர குலத்தின் குருவான சுக்கராச்சாரியார், வந்திருப்பது விஷ்ணுவின் அவதாரம் தான் என்பதை புரிந்து கொண்டார். அவர் உடனடியாக மகாபலி சக்கரவர்த்தியிடம், எனக்கு இந்த தானம் கேட்பவர் மேல் சந்தேகம் உள்ளது. மேலும் இவர் திருமாலின் அவதாரமாக இருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

தானத்தை தடுக்க முயற்சி

அவரது வார்த்தையை கேட்ட மகாபலி சக்கரவர்த்தி, தன்னிடம் தானம் பெற வந்திருப்பது திருமால் என்றால் அதை விடப் பேறு எனக்கு என்ன இருக்கப் போகிறது என்று கூறினார். மேலும் அத்துடன் நில்லாமல், கமண்டலத்தை எடுத்து அதில் உள்ள நீரால் தானம் செய்ய முன்வந்தார். மகாபலியை இதற்கு மேல் தடுத்து நிறுத்த முடியாது என்று எண்ணிய சுக்கராச்சாரியார், வண்டு உருவம் எடுத்து கமண்டலத்திற்குள் புகுந்து நீர் வரும் பாதையை தடுத்தார்.

இதனை அறிந்து புன்முறுவல் பூத்த வாமனர், ஒரு சிறு தர்ப்பை குச்சியை எடுத்து கமண்டத்தை அடைத்து கொண்டிருக்கும் வண்டினை தட்டி விட்டார். இதில்

சுக்கராச்சாரியாரின் கண் பார்வையை இழந்தது. பின்னர் தானம் செய்வதற்காக மகாபலி, வாமனருக்கு நீர் வார்த்து கொடுத்தார். இதையடுத்து 3 அடி குள்ள உருவில் இருந்த வாமனர், ஓங்கி உயரத் தொடங்கி விண்ணை முட்டி நின்றார். அவரை பார்த்து அதிசயித்தார் மகாபலி சக்கரவர்த்தி.

உலகளந்த பெருமாள்

ஓங்கி வளர்ந்த வாமனர், தனது வலது காலால் முதல் அடியாக மண்ணுலகையும், இரண்டாவது அடியாக விண்ணுலனையும் அளந்து முடித்தார். பின்னர் 3வது அடியை எடுத்து வைக்க நிலம் இல்லையே என்று கூறிய வாமனரை, பார்த்து மூன்றாவது அடியை தனது தலையில் வைக்குமாறு கூறினான் மகாபலி சக்கரவர்த்தி.

இதையடுத்து 3வது அடியை மகாபலியின் தலையில் வைத்த அவனை பாதாள உலகத்திற்குள் தள்ளி அந்த உலகையும் அளந்தார். பின்னர் மகாபலியின் பக்தியை மெச்சிய வாமனர். மன்னனுக்கு மோட்சம் வழங்கினார்.

அப்போது மகாபலி சக்கரவர்த்தி, உலகளந்த பெருமாளை பார்த்து, தான் தனது நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன். எனவே வருடத்திற்கு ஒருமுறை பாதாள உலகில் இருந்து எனது நாட்டு மக்களை காண பூமிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று இரைந்து வேண்டினார். அதற்கு திருமாலும் மனமுவர்ந்து அனுமதி அளித்தார்.

திருவோணத் திருநாள்

அப்படி ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்றும் மகாபலி சக்கரவர்த்தி தனது நாட்டு மக்களை பார்ப்பதற்காக பூமிக்கு வரும் நாளை நினைவுகூறும் விதமாகத்தான் அந்த நாளை ஓணம் பண்டிகையாக கேரளாவைச் சேர்ந்த பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அவரை வரவேற்கும் விதமாக 10 நாட்களுக்கு முன்னதாகவே இந்த விழாவை தொடங்கி நடத்துவார்கள்.

ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடையை மட்டுமே அன்றைய தினத்தில் உடுத்துவார்கள். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினால் அழகு கோலங்கள் இட்டு ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.