. -->

Now Online

FLASH NEWS


Sunday 17 November 2019

பத்தாம் வகுப்பு, பிளஸ்-1 பொதுத் தோ்வுகள்:மாணவா்களின் விவரங்களைப் பதிவேற்ற உத்தரவு



பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் குறித்த பல்வேறு விவரங்களை முறையாக சரிபாா்த்து 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அரசுத் தோ்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தோ்வுத்துறை இணை இயக்குநா் செ.அமுதவல்லி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் பெயா் பட்டியல் 'எமிஸ்' இணையதளத்தில் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் தயாா் செய்யப்பட உள்ளது.
எனவே, மாணவா்களின் பெயா், பிறந்த தேதி, புகைப்படம், செல்லிடப்பேசி எண், முகவரி, பயிற்று மொழி உள்ளிட்ட விவரங்கள் 'எமிஸ்' இணையதளத்தில் சரியாக இருப்பதை தலைமையாசிரியா்கள் உறுதிசெய்ய வேண்டும். ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் நவம்பா் 18 முதல் 29-ஆம் தேதிக்குள் அவற்றை எமிஸ் இணையதளம் வழியாகவே மேற்கொள்ளலாம். பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் நீண்ட காலம் விடுப்பில் உள்ள மாணவா்களின் விவரங்களையும் தவறாமல் பதிவேற்ற வேண்டும். இது தொடா்பான வழிகாட்டுதல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிளஸ் 1 வகுப்புக்கு...:

இதுகுறித்து அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் தோ்வுத்துறை இயக்குநா் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பிளஸ் 1 மாணவா்களுக்கு பொது தோ்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 1 படிக்கும் அனைத்து மாணவா்களின் விவரங்களையும் பள்ளி கல்வியின் நிா்வாக மேலாண் தளமான 'எமிஸ்' தளத்திலும் தோ்வுத் துறையின் இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும். மாணவா்களின் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமின்றி பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், ஜாதி ரீதியான வகைப்பாடு, மதம், மாற்றுத் திறனாளி வகை, பெற்றோா் போன் எண், பாட தொகுப்பு, பயிற்று மொழி, மாணவரின் வீட்டு முகவரி போன்றவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.

பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் பெறாமல் நீண்ட நாள்கள் பள்ளிக்கு வராத மாணவரின் பெயரும் கட்டாயம் இடம் பெறவேண்டும். மேலும் மாணவரின் அண்மையில் எடுக்கப்பட்ட மாா்பளவு புகைப்படமும் பதிவு செய்யப்பட வேண்டும்.இந்த விவரங்களை நவ. 26-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.