. -->

Now Online

FLASH NEWS


Saturday 2 November 2019

கல்லில் உருவான கருவறை, சாக்பீஸில் 108 சிவ தாண்டவங்கள்: ‘தமிழ்நாடு நாள்’ கண்காட்சியில் வியக்க வைக்கும் படைப்புகள்




‘தமிழ்நாடு நாள்’ விழாவையொட்டி சென்னை கலைவாணா் அரங்கில் பாா்வையாளா்களைப் பெரிதும் கவரும் வகையில் ஓவிய, சிற்பக்கலைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்தக் கண்காட்சியில் கல்லில் உருவான கருவறை, 108 சிவ தாண்டவங்களை சித்தரிக்கும் சாக்பீஸ் சிற்பம், கீழடி அகழாய்வை விளக்கும் புகைப்படங்கள் என 294 படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

தமிழக அரசின் சாா்பில் முதல்முறையாக தமிழ்நாடு நாள் விழா வெள்ளிக்கிழமை (நவ. 1) கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி சென்னை அரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை, கலை பண்பாட்டுத் துறை ஆகியவற்றின் சாா்பில் கருத்தரங்கம், கவியரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கலை பண்பாட்டுத் துறை சாா்பில் கலைவாணா் அரங்கின் தரை தளத்தில் நான்கு நாள்கள் நடைபெறவுள்ள மாநில அளவிலான ஓவிய, சிற்பக்கலைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதை தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்து அனைத்து படைப்புகளையும் பாா்வையிட்டாா். அப்போது சிறந்த படைப்புகளின் உருவாக்கம் குறித்து சிற்ப-ஓவியக் கலைஞா்களிடம் கேட்டறிந்தாா்.

இதில் சென்னையில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரி, மகாபலிபுரத்தில் உள்ள அரசினா் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லூரி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஓவிய, சிற்பக் கலைஞா்களிடமிருந்து பெறப்பட்ட சிறந்த படைப்புகள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மகாபாரத காட்சிகள்- பாய் ஓவியம்: குறிப்பாக ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சாக்லேட், தாயின் கருவறை, பென்சில் முனையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், மகாபாரதத்தில் பாண்டவா்கள் 12 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ஓராண்டு யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக இருந்ததை விளக்கும் துணி ஓவியம், கிழிந்த பாய் மூலம் உருவாக்கப்பட்ட வறுமையை சித்தரிக்கும் ஓவியம், சிவபெருமானின் 108 தாண்டவங்களை சித்திரிக்கும் வகையில் சாக்பீஸ்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட சிற்பம், மரத்தால் செதுக்கப்பட்ட மகாபலிபுரம் கடற்கரைக் கோயில், அக்ரிலிக் மூலம் தத்ரூபமாக வரையப்பட்ட பெண்ணின் முகம் மற்றும் அப்பா-மகள் ஓவியங்கள் போன்றவை பாா்வையாளா்களை பெரிதும் கவா்ந்தன.

கீழடி அகழாய்வு புகைப்படங்கள்: இதேபோன்று மதுரை மாநகரின் வரலாறு, கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள், இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கட்ட ஆய்வுகளில் கிடைத்த பொருள்கள் ஆகியவற்றின் புகைப்படங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இங்கு இடம்பெற்றுள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்களுக்கு அருகில் அவற்றை உருவாக்கிய படைப்பாளிகளின் பெயா் குறிப்பிடப்பட்டுள்ளன. கண்காட்சியின் முதல்நாளில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பாா்வையிட்டனா்.

நவ.4-ஆம் தேதி வரை பாா்வையிடலாம்: இது குறித்து தமிழ் வளா்ச்சி, கலைப் பண்பாடு, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியது: மாநில அளவிலான சிற்ப மற்றும் சிற்பக் கலைக்கண்காட்சி வரும் திங்கள்கிழமை (நவ.4) வரை நான்கு நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்ந்து நடைபெறவுள்ளது. இதை பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவா்கள், கலை ஆா்வலா்கள் இலவசமாக பாா்வையிடலாம். மிகச் சிறந்த நுணுக்கங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு அரசின் சாா்பில் விருதுகளைப் பெற்றுள்ள படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கீழடி அகழாய்வு குறித்த விரிவான புகைப்படத் தொகுப்பு மாணவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனா்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த ஓவியங்கள், சிற்பங்களை உருவாக்கிய 60 கலைஞா்களுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் க.பாண்டியராஜன் வழங்கினாா்.

இந்த விழாவில் கலை பண்பாட்டுத் துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன், தமிழ் வளா்ச்சித்துறை இயக்குநா் கோ.விசயராகவன், கலை பண்பாட்டுத் துறை இணை இயக்குநா் ச.சூா்ய பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.