. -->

Now Online

FLASH NEWS


Sunday 17 November 2019

புதிய பார்வை! குறுவள மையத்தால் பள்ளி கண்காணிப்பு

பொள்ளாச்சி:அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை குறுவள மையமாக கொண்டு, கல்வி மேம்பாட்டு பணிகளை கண்காணிப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தெற்கு ஒன்றியத்தில் ஆறு, வடக்கு ஒன்றியத்தில் ஏழு, ஆனைமலை ஒன்றியத்தில் ஆறு, வால்பாறையில் ஐந்து குறுவள மையங்களும் உள்ளன. இந்த குறுவள மையங்களாக அறிவிக்கப்பட்ட உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கீழ் பள்ளிகள் கண்காணிப்பு செய்யப்பட உள்ளன.இதில், தெற்கு ஒன்றியத்தில், 88 பள்ளிகள், வடக்கில், 98 பள்ளிகள், வால்பாறையில், 94; ஆனைமலையில், 95 பள்ளிகள் குறுவள மையத்தின் கீழ் செயல்படும். ஒவ்வொரு குறுவள மையத்துக்கும், 15 பள்ளிகள் வீதம் பிரிக்கப்படுகிறது. குறுவள மையப்பகுதிக்குள் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள், உயர்நிலை, மேல்நிலை என கல்வி தொடர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இம்மாணவர்களுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர் மூலமாக கற்பிக்கப்படுவதோடு, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் இருப்பின் தொடக்க பள்ளி முதல் தரமான கல்வியினை வழங்க முடியும், என்கின்றனர் கல்வித்துறை அதிகாரிகள்.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் மாணவர்களை சென்றடைகிறதா என கண்காணிப்பு செய்ய வேண்டும். பள்ளிகளில் குறைகள் கண்டறியப்பட்டால், வட்டார, மாவட்ட மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்க வேண்டும்.மாணவர்களது அறிவாற்றலை மேம்படுத்திட உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வக உபகரணங்களை பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாணவர்கள் திறனை மேம்படுத்தும் வகையில், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்படுத்தப்படும், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் ஆர்வம், உடல் நலனை மேம்படுத்த உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் விளையாட்டு வகுப்புகள் நடத்த வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் துவங்கி, கணினி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை குறுவள மையத்தின் எல்லைக்குள் செயல்படும் அனைத்து வகையான அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்படுத்தி கணினி சார்ந்த திறன்களை பெற வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும், என அரசு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.