. -->

Now Online

FLASH NEWS


Saturday 16 November 2019

தனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகளைப் பார்த்து போட்டி போடும் நிலையை ஆசிரியர்கள் கொண்டு வர வேண்டும்: நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குநர் சுகன்யா பேச்சு.

 







தனியார் பள்ளிகள் அரசுப்பள்ளிகளைப்   பார்த்து போட்டி போடும்  நிலையை ஆசிரியர்கள் கொண்டு வர வேண்டும் என நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குநர் சுகன்யா பேசினார்.


புதுக்கோட்டை மாவட்டம்  இலுப்பூர் மதர்தெரசா கல்வியியல் கல்லூரியில் தேசிய அளவில் தலைமைஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு பயிற்சியின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பயிற்சியின் நிறைவு விழாவின் போது பயிற்சிக்கான கட்டகங்களை வழங்கி நாட்டுநலப்பணித் திட்ட இணை இயக்குநர் சுகன்யா பேசியதாவது: தற்பொழுது நமது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் அரசுப்பள்ளிகளின் தரம் உயர பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.வகுப்பறைகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர்களுக்கு பல புதுமையான பயிற்சிகளை அளித்து வருகிறார்கள்..இந்தப் பயிற்சி அளிப்பதன் நோக்கமே மாணவர்களின் கற்றல் அடைவு திறனை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும் என்பதற்கு தான்.எனவே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் இந்த பயனுள்ள பயிற்சியை  நிச்சயம் வகுப்பறைகளுக்கு ஆசிரியர்கள்  எடுத்துச் செல்ல வேண்டும்.நான் படிக்கும் காலங்களில் எல்லாம் பெற்றோர்கள் கண்ணைத் தவிர எங்கு வேண்டுமானாலும் அடியுங்கள் என கூறி குழந்தைகளை பள்ளியில் விட்டுச்சென்றார்கள்.அன்றைய பெற்றோர்களின் எண்ணம் குழந்தைகள் நன்றாக படித்து சமூகத்தில் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என நினைத்தார்கள்.அந்த காலகட்டத்தில் ஒரு வீட்டில் நான்கு முதல் பத்து குழந்தைகள் வரை இருப்பார்கள்.ஆனால் இன்று ஒருவீட்டில் ஒரு பிள்ளை இருப்பதால் சிறு விஷயங்களுக்கு கூட கண்கலங்கி விடுகிறார்கள்.வீட்டிலும் கண்டிப்பது கிடையாது ,சொந்த பந்தங்களையும்,ஆசிரியர்களையும் கண்டிக்க கூடாது என கூறி  விடுகிறார்கள்.இப்படி இருக்கும் பொழுது பாடம் கற்றுக் கொள்வதில் அவர்களின் பங்களிப்பு அவ்வளவாக இராது.இங்கே ஆசிரியர்களாகிய நீங்கள் தான்  அவர்களின் சூழ்நிலை அனைத்தையும் புரிந்து கொண்டு சமுதாயத்தில் சிறந்த மாணவர்களாகவும் திறமை மிக்க மாணவர்களாகவும் மாற்ற வேண்டும்.குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வண்ணம் கற்றுக் கொடுக்க வேண்டும்.அனைத்து குழந்தைகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.இந்நிலை மாறி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.அரசுப்பள்ளிகளைப் பார்த்து தனியார் பள்ளிகள் போட்டி போடும் நிலையை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கொண்டு வர வேண்டும்.மாணவர்களை அடித்து திருத்துவது கலை கிடையாது.அவனது சூழ்நிலையை அறிந்து அடிக்காமலே திருத்த வேண்டும்.பயிற்சியில் பெறப்படும் கற்பித்தல் முறைகளை வகுப்பறையில் பயன்படுத்துங்கள்.அதன் மூலம் உங்கள் வகுப்பறையை சிறந்த வகுப்பறையாக மாற்றுங்கள்.மற்ற ஆசிரியர்களை விட நீங்கள் சிறப்பாக செயல்படுங்கள்.உங்களிடம் பயின்ற மாணவர்களிடம் நான் இந்த ஆசிரியரிடம் பயின்றேன் அந்த ஆசிரியர் போல் பாடம் நடத்த முடியாது,நல்ல குணம் கொண்டவர் என கூறும் படி நடந்து கொள்ளுங்கள்.நல்ல பொறியாளர்கள் இல்லை எனில் கட்டிடங்கள் விரைவில் பழுதடைந்து விடும்.நல்ல மருத்துவர்கள் இல்லை எனில் நோயாளிகள் எண்ணிக்கை பெருகி விடும்.எனவே  சமூகத்தில் சிறந்த பொறியாளர்கள்,மற்றும் மருத்துவர்களை ஆசிரியர்கள் உருவாக்கிட வேண்டும்.இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த பணி ஆசிரியப்பணி.எனவே ஆசிரியைப் பணியை பெருமையாக நினைத்து பணிபுரிய வேண்டும் என்றார்.


முன்னதாக பயிற்சிக்கான கட்டகத்தை பயிற்சி வந்திருந்த ஆசிரியர்களிடம் நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குநர் சுகன்யா வழங்கினார்.


நிகழ்வின் பொழுது புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் கே.எஸ்.இராஜேந்திரன்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன்,மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மெ.ரெகுநாததுரை,அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

வட்டார வளமைய பயிற்றுநர்கள் உஜ்ஜமில்கான், கண்ணன்,மலையரசன்,பெரியசாமி,சென்றாய பெருமாள்,அழகுராஜா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.


பயிற்சியில் தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் அன்னவாசல் ஒன்றியத்தைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


பயிற்சிக்கான ஏற்பாடுகளை அன்னவாசல் வட்டார வளமைய பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரெத்தினசபாபதி செய்திருந்தார்.