. -->

Now Online

FLASH NEWS


Saturday 23 November 2019

மேடைப்பேச்சு சால்வைகளை ஏழைத் தொழிலாளர்களுக்கு கொடுத்து உதவும் ஆசிரியர்!



கும்பகோணம் அருகே வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர், மேடைப் பேச்சின்போது தனக்கு கிடைத்த சால்வைகளை தள்ளுவண்டி வியாபாரிகளுக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கும் வழங்கி வருகிறார். இவரது செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


கும்பகோணம் அருகே வலங்கைமான் ஒன்றியம் தென்குவளை வேலி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிபவர் ஆதலையூர் சூர்யகுமார். இவர் 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் கல்வி சார்ந்த மேடைப் பேச்சிலும் வல்லவர். இதனால் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை குழுஉறுப்பினராக தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்டார்.
இவரது சிறந்த கல்விப் பணிக்காக புதிய தலைமுறை தொலைக்காட்சி இவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இவர் மேடைப் பேச்சின்போது தனக்கு அணிவிக்கப்பட்ட சால்வைகளை சேகரித்து ஏழை எளியோர், தள்ளுவண்டி வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இன்று கும்பகோணம் மீன் அங்காடியில் உள்ள தள்ளுவண்டி வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு தனக்கு வழங்கப்பட்ட சால்வைகளை வழங்கினார். தொழிலாளர்களின் உழைப்பை அங்கீகரிப்பதற்காகவும், மார்கழி மாதம் குளிரில் இருந்து காத்துக் கொள்ளவும் இந்த சால்வையை வழங்குவதாகவும், இதன் மூலம் மன நிறைவு ஏற்படுவதாகவும் ஆசிரியர் சூர்யகுமார் தெரிவித்தார்.