. -->

Now Online

FLASH NEWS


Tuesday 19 November 2019

அரசு பள்ளி குழந்தைகளுக்கு கராத்தே : பயிற்சி நாட்களை கூடுதலாக்க வலியுறுத்தல்

அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கும் நாட்களை, கூடுதலாக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.பள்ளிக்குழந்தைகள், பல சூழ்நிலைகளில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இப்பிரச்னைகளிலிருந்து, பெண் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.முதலில், ஒரு வட்டாரத்துக்கு, ஒரு பள்ளியில் மட்டுமே திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டத்தால், மாணவியர் பயன்பெறுவதை பெற்றோர் வரவேற்றனர். இதனால், திட்டத்தை அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகளிலும், செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதன்படி, கடந்தாண்டு முதல், அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகளிலும், பெண் குழந்தைகள் மட்டுமின்றி, மாணவர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சிகள் தற்போது, எட்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு வழங்கப்படுகிறது.ஒரு கல்வியாண்டில், மூன்று மாதங்களுக்கு என பயிற்சி வகுப்பு, வாரத்தில் இரண்டு நாட்கள் நடக்கிறது. பள்ளி குழந்தைகள் ஆர்வத்தோடு பயிற்சியில் பங்கேற்கின்றனர். சில பள்ளிகளில், மாணவர்களின் ஆர்வத்தால், பள்ளி ஆசிரியர்கள் மூலம் நாட்களை அதிகரித்தும் பயிற்சி வழங்குகின்றனர்.

மூன்று மாதங்களில் பயிற்சிக்கான அடிப்படைகளை மட்டுமே கற்றுத்தர முடிகிறது. விருப்பமுள்ள குழந்தைகள், அந்த பயிற்சி ஆசிரியர்களிடம் தொகை செலுத்தி தொடர்ந்து பயிற்சி மேற்கொள்கின்றனர். சில குழந்தைகளுக்கு விருப்பமிருந்தும், பயிற்சிக்கு செல்ல போதிய பொருளாதார வசதியின்மையால், விட்டு விடுகின்றனர். மாணவர்கள் அனைவரும் கராத்தே தற்காப்பு பயிற்சியில் முழுமையாக பயன்பெற, பள்ளிகளில் வழங்கப்படும் பயிற்சி நாட்களை கூடுதலாக்க வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.