. -->

Now Online

FLASH NEWS


Sunday 24 November 2019

QR CODE இப்போதைய நிலை என்ன? விரிவான அலசல்...

இந்த வாரக் காமதேனு இதழில் QR CODE குறித்து.... உங்கள் அனைவரது கருத்துகளின் குரலாக ...

#குழப்பத்தில்_ஆழ்த்தும்_க்யூ_ஆர்_கோடு

கல்வித் துறையின் தற்போதைய மாற்றங்களில் மிக முக்கியமானது  தகவல் தொடர்புதொழில் நுட்பத்தை  (ICT)எல்லா நிலைகளிலும் இணைப்பது என்றால் மிகையாகாது. ஆசிரியர்களுக்கு கற்பித்தல் சாரா பணிகளில் பல வகையான தகவல் தொழில் நுட்பப் பயன்பாட்டை தினசரி புதிய புதிய வழிகளில் அறிமுகம் செய்கிறது கல்வித் துறை. அதனை  வரவேற்பதா அல்லது அதிருப்தியாக எண்ணுவதா என்பதை  கடந்த பல வாரங்களில் இந்த இதழில்  வெளிவந்து கொண்டிருக்கும் கல்வி குறித்த கட்டுரைகளை வைத்து நீங்களே முடிவு செய்யலாம் .

ஆனால் ,கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும்
பாடநூல்களில்  விரைவுத் துலங்கல் குறியீடு(QR CODE )  என்ற செயலி  கல்வித் துறையால் சமீபமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடத்திலிருந்து இந்த க்யூ ஆர் கோடு செயலிகள் இணைக்கப்பட்டு  வருகின்றன. அது  குறித்து பள்ளிக் கல்வியில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் , பெற்றோரிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு , மாணவர் மத்தியில் நிலவும் கருத்து , எல்லா நிலைகளிலும் நாம் சந்திக்கும் உண்மை  நிலவரம் என பல கோணங்களில் புரிந்து கொள்ள இக்கட்டுரையை வாசியுங்கள் .

#அதென்ன_க்யூ_ஆர்_கோடு(QR CODE )  ?

க்யூ ஆர் கோடு என்பது தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய அங்கமாகி விட்டது.

தமிழக அரசு கடந்த 2018 - 19 இல்
  1 , 6 , 9 , 11 வகுப்புகளுக்கு
புதிய பாடநூல்களைத்   தயாரித்து அவை பயன்பாட்டுக்கு வந்தன . அப்போது அந்த பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் அப்போது கல்வித் துறை செயலராக இருந்த திரு உதயச்சந்திரன் IAS . பாடநூல்களைத் தரமாகத் தயாரிக்க பல்வேறு உத்திகளைக் கையாள முழுமையாக ஈடுபாட்டுடன் முனைப்பு காட்டினார். அவ்வாறான உத்திகளில் ஒன்று தான் இந்த விரைவுத் துலங்கல் குறியீடு (QR CODE ) செயலி.
பாடநூல்கள் அனைத்திலும் ஒவ்வொரு பாடத்தின் ஆரம்பப் பக்கத்திலும் , மதிப்பீடு பக்கத்திலும்  செயல்பாடுகள் பக்கத்திலும் என்பதாக இந்த க்யூ ஆர் கோடுகள் அச்சாகி இருக்கும். புத்தகத்தில் முதல் பாடம் ஆரம்பிக்கும் முன்னரே 3 வகையான செயலிக் குறியீடுகள் தரப்பட்டு இருக்கும் . அவை முறையே மின் நூல் , மதிப்பீடு , இணைய வளங்கள் என்று பெயரிடப்பட்ட க்யூ ஆர் கோடுகளின் அடையாளங்கள் . அவை அந்தந்த வகுப்புகளின் பாடநூல்களில் உள்ளே இருக்கும் பாட வரிசைக்கு ஏற்ப இணைப்புகளாக அமைந்திருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

#பயன்படுத்தும்_வழிமுறைகள்

ஆன்ட்ராய்டு வசதியுள்ள  அலைபேசிகளில் க்யூ ஆர் கோட்டிற்கான செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம் . அல்லது கணினி ,மடிக்கணினி ஆகியவற்றிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.   பாடநூல் பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ள க்யூ ஆர் குறியீடுகளை தங்கள் அலைபேசியில் உள்ள இந்த செயலிியைத் திறந்து புகைப்படம் எடுப்பது போல ஸ்கேன் செய்யும் போது அந்த பாட நூலில் இந்தக் குறியீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணை அது உள்வாங்கி அதற்குரிய பக்கத்திற்கு செல்லும். (உ. ம்) 344 MZT இது பத்தாம் வகுப்பு ஆங்கில வழிக் கணக்குப் பாட நூலில் உள்ள க்யூ ஆர் குறியீட்டு எண். இந்தக் குறியீட்டை அலைபேசி வழியாகத் திறக்கும் போது அது ஒரு இணையப் பக்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது . அங்கு ஒவ்வொரு பாடத்திற்கும்  கற்றல் வளங்கள் (Digital Contents) இணைக்கப்பட்டிருக்கும் . மின்நூல் (E -Book ) செயலியைத் திறந்தால் சம்மந்தப்பட்ட வகுப்பின் பாடநூல் மின்னியமாக (Digital) இருக்க வேண்டும்  .மதிப்பீடு (Evaluation) என்றால் அதற்குரிய பயிற்சிகள் இருக்க வேண்டும் .இணைய வளங்கள் (Digi links) ஐத் திறந்தால் தொடர்புடைய இணைய வளங்கள்
இணைக்கப்பட்டிருக்க வேண்டும் .
அவற்றை மாணவர்கள் தாங்களாகவே வீட்டில் உள்ள அலைபேசி கொண்டு பயன்படுத்தலாம். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு அவற்றை எடுத்து கற்பிக்கவோ வழிகாட்டவோ உதவும்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைகளில் பயன்படுத்த வேண்டும்.

#நடைமுறையில்_என்ன_நிலை ?

ஒவ்வொரு வருடமும்  பாடநூல் குறித்து சில பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படும். அதே போல சென்ற வருடம் புதிய பாடநூல்கள் வெளிவந்த பிறகு பயிற்சி தரப்பட்டது. அதில் இந்த விரைவுத் துலங்கல் செயலிகள் (QR CODE ) எவ்வாறு பயன்படுத்துவது என ஒரு வகுப்பும் இடம் பெற்றது. வழக்கம் போல அனைவருக்கும் வழங்கப்பட்டதா என்பதில் பல சிக்கல்கள் . அதில் திக் ஷா(Dhiksha)
என்ற செயலி வழியே தான் இந்த
QR செயலியைத் திறக்கச் சொல்லி வலியுறுத்தினர். அது ஏன் ? என்று
எவருக்கும் தெரியவில்லை .ஏற்கனவே SCERT யூ டியூப் சேனல் இருக்கிறது. அங்கு ஏன் தொடரக் கூடாது என்பதும் கேள்விக் குறி .

#நேரமின்மை

ஒவ்வொரு பாட வேளையும் 45 நிமிடங்களே உண்டு . பாடப் புத்தகத்தில் உள்ள பாடப் பொருள்களை
அந்த 45 நிமிடத்தில் மாணவர்களிடம்
முழுமையாகக்  கொண்டு சேர்ப்பதே   ஆசிரியர்களுக்கு  சவால் என்பதில் ஆரம்பித்து இந்த செயலிகளைப் பயன்படுத்துவது இயலாமலேயே  போகின்றது என்பது தான் நிதர்சனமான உண்மை . தேர்வு , முப்பருவ பாட நூல்கள் , அவற்றின் அடர்த்தி , ஆசிரியர்கள் கற்பித்தல் அல்லாத பிற பணிகள் , பதிவேடுகள் பராமரிப்பு , ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பது , மாணவர்கள் விடுப்பு எடுப்பது , பாட இணைச் செயல்பாடுகள் இவற்றின் வரிசைகளில் இந்த க்யூ ஆர் கோடுகள்  வழியே  தேடும் கூடுதல் தகவல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு வேண்டாம் என முடிவு செய்கின்ற சூழல் தான் 90% பள்ளிகளில் நிலவுகிறது.

தொடக்கப் பள்ளிகளில் பயன்பாடு என்பதும்  0% தான்.
வழக்கம் போல தொடக்கப் பள்ளிகள் ஒராசிரியர் , ஈராசிரியர் பள்ளிகளாக இருக்கும் சூழ்நிலையில் ,  ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு 23 பாடங்களைக் கற்பிக்கவே அவர்களால் இயலாது.
இணைய வசதியின்மை இருப்பினும் பதிவேடு பராமரிப்பு கட்டாயம்

சவால்களை எதிர் கொண்டாலும் ஆர்வமிகுதியால் பல ஆசிரியர்கள் தங்கள் சொந்த முயற்சியால் இச்செயலியை வகுப்பறைக்குள் பயன்படுத்த நினைக்கும் போது ஏற்படும் சிக்கல்களில் மிக முக்கியமானது , இணைய வசதி ஒத்துழைப்பு கிடைக்காதது. ஆனாலும் இவற்றைக் கையாள்வது குறித்தும் பதிவேடுகள் பராமரிக்க கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது என்பது தான் வேதனை .

#ஆசிரியரது_கருத்துகள்

கற்றல் வளங்களில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ராகமோ தாளமோ இல்லவே இல்லை.குறைந்தபட்சம் குரல்ஒலி கூட அவர்களை கவரும்வண்ணம் இல்லை....

பெரும்பாலும் டவர் கிடைப்பதில்லை
பாடம் நடத்தும் போது  அந்த சமயத்தில் Q.R  ஓபன்  ஆகாது

பல QR code கள் ஓபன் ஆகவில்லை என்று கூறுவதை காட்டிலும் QR code ல் காணொலிகள் , கற்றல் வளங்கள் எதுவுமே பதிவேற்றம்  (video update) செய்யவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்

ஓப்பன் ஆனாலும் மொபைலில் எல்லாக் குழந்தைகளும் தெளிவாகப் பார்க்க முடியாது.

எங்கள் மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்..எங்கள் பகுதியில்  நெட்வொர்க் சிக்னல் கிடைக்காது..
ஆனாலும் வீட்டில் பாடங்களின் வீடியோக்களை  பதிவு இறக்கம் செய்து மாணவர்களுக்கு எடுத்துச் சென்று கொண்டு வருகிறேன்..மாணவர்களுக்கு உள்ள ஆர்வம் நேரமின்மையின் காரணமாகஆசிரியர்களிடம் இல்லை என்றே கூறலாம்.

க்யூ ஆர் கோடை ஸ்கேன்
(QR code scan ) செய்வதை விட யூ டியூப் சேனல் (youtube) எளிதாக  உள்ளது என்கின்றனர்.
எப்போதாவது போடுவதுண்டு தினமும் முடிவதில்லை..

#கற்றல்_வளங்களை_தயாரிப்பு

QR CODE இல் பயன்படுத்தும் கல்வி தொடர்புடைய கற்றல் வளங்கள் ஆசிரியர்களால் தான் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக வருடக் கணக்கில் பள்ளிகளை விட்டு குடும்பங்களை விட்டு சென்னையில்  வந்து தங்கி   இவற்றைத் தயாரித்து வருகின்றனர் . கற்பித்தல் திறனும் தொழில் நுட்பத் திறனும் படைப்பாற்றல் திறனும் ஒருங்கே பெற்றவர்களால்  தான் இவற்றைத் திறம்பட செய்ய இயலும். பல வகுப்புகளுக்கு அந்த QR வழியே சென்று பார்த்தால் எதுவுமே பதிவேற்றம் செய்யப்படாமலும்  தரமற்ற கற்றல் வளங்களும் இருப்பதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இப்பணிகளுக்காக  மாதக் கணக்கில் வருடக் கணக்கில் மாற்றுப் பணியில் வந்திருக்கும் ஆசிரியர்களுக்கு பதிலாக அவர்களது பள்ளிகளில் மாணவர் கற்றல் தடைபடாதிருக்க கல்வித் துறை என்ன முயற்சி எடுத்துள்ளது என்பது மற்றொரு கேள்வி .

#என்ன_செய்ய_வேண்டும் ?

முதலில்  அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பில் ஒவ்வொரு வகுப்பிற்கும்  படவீழ்த்தி (Projector) , ஒலிபெருக்கி (Speaker) , கணினி ஆகியன அமைக்க வேண்டும் . அல்லது தமிழகப் பள்ளிகள் அனைத்தையும் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்ட வகுப்பறைகள் நிறைந்த பள்ளிகளாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் இணைய வசதி செய்து தர வேண்டும். வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்க வேண்டும் .  கற்றல் வளங்களை தயாரிக்க ஆசிரியரல்லாத விஷவல் மீடியா மாணவர்களை குழுக்களாக நியமிக்க வேண்டும். கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன வழிகாட்டுதலின் படி பேராசிரியர்களுக்கு மதிப்பீடு செய்ய  வழிகாட்டு நெறி முறைகள் தரவேண்டும். பதிவேடுகளைத் தவிர்த்து முறையான கற்பித்தல் முறைகளை அணுக ஆசிரியர்களுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும். பல ஆயிரம் பள்ளிகளில் தலைமை ஆசிரியருக்கோ ஆசிரியர்களுக்கோ இது குறித்து  இன்னும் புரிதல் இல்லை. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில்  இது போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டு சரியான முறையில் பயன்படுத்தாதது குறித்து மக்கள் மத்தியிலும் கல்வியாளர்கள் தரப்பிலும் இருந்து கூட கண்டனங்கள் வரவில்லை .இந்தப் போக்கை கல்வித் துறை மாற்றிக் கொள்ள வேண்டும்.

உமா
ஒருங்கிணைப்பாளர் ,
பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்