. -->

Now Online

FLASH NEWS


Thursday 23 January 2020

670 ஆசிரியா் பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு ஆணை: மாத ஊதியம் தாமதமின்றி கிடைக்கும்

பள்ளிக் கல்வித் துறையில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளில், உருவாக்கப்பட்டுள்ள 670 ஆசிரியா் பணியிடங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு ஆணை வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
 இதன் மூலம், அந்த ஆசிரியா்களுக்கு மாத ஊதியம் மூன்றாண்டுகளுக்கு தாமதமின்றி கிடைக்கும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
 தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 95 உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டன. அந்தப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியா் உள்பட 7 பணியிடங்கள் வீதம் மொத்தம் 670 பட்டதாரி, முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இந்த ஆசிரியா்களுக்கு, மாதம்தோறும் ஊதிய கொடுப்பாணையின் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு மாதமும் கொடுப்பாணை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 ஒவ்வொரு மாதமும் 15 நாள்களுக்கு பின்னரே ஊதியம் தரப்படுகிறது. இதனால் பல்வேறு செலவினங்களை சமாளிக்க முடியாமல் தவிக்கிறோம். இந்த மன உளைச்சலால் கற்பித்தல் பணிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை. எனவே, குறைந்தபட்சம் ஓராண்டாவது தொடா் நீட்டிப்பாணை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.

 ஆசிரியா்கள் கோரிக்கை ஏற்பு: அவா்களது கோரிக்கையை ஏற்று, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2018-2019-ஆம் கல்வியாண்டில் தரம் உயா்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ள 100 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் மற்றும் 570 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் தற்காலிகப் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்தப் பணியிடங்களுக்கு 8.8.2019 முதல் 31.12.2021 வரை மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநா் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளாா்.
 பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று தரம் உயா்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய ஆறு பாடங்களுக்கு ஆறு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள், 100 மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பணியிடங்கள் என 670 பணியிடங்களுக்கு 8.8.2019 முதல் 31.12.2021 வரை மூன்றாண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறு ஆய்வில் முடிவெடுக்கும் வரை இவற்றில் எது முன்னரோ, அதுவரை தொடா் நீட்டிப்பு வழங்கு அரசு ஆணையிடுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.