. -->

Now Online

FLASH NEWS


Tuesday 28 January 2020

இந்தியாவிலிருந்து வென்ற ஒரே அரசுப் பள்ளி ஆசிரியர்; சர்வதேச வானவியல் ஒன்றியத்தின் பரிசு

சர்வதேச வானவியல் ஒன்றியத்தின் பரிசை இந்தியாவிலிருந்து வென்ற ஒரே ஆசிரியர் என்ற பெருமையை புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியர் அரவிந்தராஜா பெற்றுள்ளார்.


புதுச்சேரி முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் அரவிந்தராஜா. சர்வதேச வானவியல் ஒன்றியம் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி வானியல் செயல்பாடுகளை குழந்தைகளிடத்தில் கொண்டு செல்ல போட்டியை நடத்தியது.

அதையடுத்து "நிலவில் தரையிறங்குதல் 50 ஆண்டுகள்" தொடர்பான செயல்பாட்டில் 128 நாடுகளில் இருந்து 10 லட்சம் பேர் உலகம் முழுவதுமிருந்து பங்கேற்றனர்.

அதில் இந்தியாவிலிருந்து ஆசிரியர் அரவிந்தராஜா மட்டும் தேர்வாகி சாதனை படைத்தார்.

இது தொடர்பாகப் பரிசு வென்ற ஆசிரியர் அரவிந்தராஜா கூறியதாவது:
"நெதர்லாந்தைத் தலைமையிடமாக கொண்ட சர்வதேச வானவியல் ஒன்றியம் வானவியல் கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க முடிவு எடுத்தது. ஒரே வானத்தின் கீழ் என்ற கருத்தை மையமாகக் கொண்டு வானவியல் ஒன்றியம் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இதையடுத்து எங்களின் அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ராஜேந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் நான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து மாணவர்களுக்கு நிலவு மாதிரி முப்பரிமாண வடிவில் செய்தல், பெண் வானவியல் அறிஞர்களின் சாதனைகளை எடுத்துரைத்தல், சந்திர கிரகணம், சூரிய கிரகணங்களை உற்று நோக்கிப் பதிவு செய்தல், பாதுகாப்பான பந்து கண்ணாடி முறையில் சூரிய கிரகணத்தைப் பார்வையிடச் செய்தல் போன்ற விழிப்புணர்வுச் செயல்பாடுகளைச் செய்தோம்.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நடைபெறுதலைப் படம் எடுத்து புகைப்படக் கண்காட்சி நடத்தினோம். பின்னர் சந்திரயான் 2 முப்பரிமாண மாதிரியை எளிதில் கிடைக்கும் பயனற்ற பொருட்களைக் கொண்டு மாணவர்களை வடிவமைக்கச் செய்து விளக்கினோம்.

நிலவில் மனிதன் கால்பதித்த நிகழ்வை "நிலவில் தரையிறங்குதல் 50" என்ற தலைப்பில் சர்வதேச வானவியல் ஒன்றியச் செயல்பாட்டில் மாணவி விஜயாவின் ரங்கோலி ஓவியத்தை வரையச் செய்தோம். இதைப் பார்வையிடவும் ஏற்பாடு செய்தோம்.

இதுபோன்று 15 செயல்பாடுகளை கடந்த ஆறு மாத காலம் மாணவர்கள் செய்தனர். "ராக்கெட் வடிவமைத்தல், நிலவுடன் செல்ஃபி" என்ற செயல்பாடுகள் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தன. இச்செயல்பாடுகளை சர்வதேச வானவியல் ஒன்றியம் மதிப்பீடு செய்தது.

"அனைவருக்கும் வானவியல்" என்ற தலைப்பில் ஆறு நாடுகளைச் சேர்ந்தோர் பரிசு வென்றனர். இதில் இந்தியாவிலிருந்து எனக்குப் பரிசு கிடைத்துள்ளது. அத்துடன் எங்கள் பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் தரப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது சான்றிதழ்கள் மெயிலில் வந்துள்ளன. டெலஸ்கோப் உள்ளிட்ட பரிசுகள் விரைவில் கிடைக்கும்" என்று குறிப்பிட்டார்.

பள்ளி, ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பள்ளி இணை இயக்குநர் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர்.

Source The Hindu Tamil