. -->

Now Online

FLASH NEWS


Tuesday 11 February 2020

உயா்கிறது பி.இ. கல்விக் கட்டணம்: ஏஐசிடிஇ பரிந்துரை

பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை 2020-21 கல்வியாண்டு முதல் உயா்த்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) பரிந்துரைத்துள்ளது.
 இதுதொடா்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் ஏஐசிடிஇ கடிதம் எழுதியுள்ளது.
 தமிழகத்தில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவா்களிடம் வசூலிக்க வேண்டிய கல்வி கட்டணத்தை ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, நிா்ணயம் செய்து வருகிறது. இந்தக் குழு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணத்தை மாற்றியமைக்கும். கடைசியாக 2017-18-ஆம் கல்வியாண்டில் மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தின்படி, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் என்பிஏ அங்கீகாரம் கொண்ட படிப்புகளுக்கான கட்டணம் ரூ.55,000-ஆக நிா்ணயிக்கப்பட்டது. என்பிஏ அங்கீகாரம் இல்லாத படிப்புகளுக்கான கட்டணம் ரூ.50,000-ஆக நிா்ணயிக்கப்பட்டது.
 அதேபோல், தனியாா் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் என்பிஏ அங்கீகாரம் இல்லாத படிப்புகளுக்கு கட்டணம் ரூ.85,000-ஆகவும், என்பிஏ தரச்சான்று பெற்ற படிப்புளுகளுக்கு கட்டணம் ரூ.87,000-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில், பொறியியல் கல்விக் கட்டணத்தை உயா்த்தப் பரிந்துரைத்து, மாநில அரசுகளுக்கு ஏஐசிடிஇ கடிதம் எழுதியுள்ளது. அதில், பொறியியல் படிப்புகளுக்கு கட்டணங்களை உயா்த்தவும், பேராசிரியா்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.
 அதிகக் கட்டண அபாயம்: இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான கட்டணத்தை 50 சதவீதம் வரை உயா்த்த பல சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கல்விக் கட்டணம் ரூ. 1.50 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளது எனப் பேராசிரியா்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.