. -->

Now Online

FLASH NEWS


Wednesday 5 February 2020

குழந்தைகள் எதற்கு சுமை தூக்கணும்? அசத்தும் அரசுப் பள்ளி!

பிஞ்சுக் குழந்தைகள், தங்களின் தொடக்கப் பள்ளிக் காலத்தில் மனதளவில் சுமைகளை அனுபவிக்கக்கூடாது என்கிறோம். ஆனால், அவர்கள் மிருகங்களைப் போல முதுகில் சுமைகளைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார்கள். இயல்பு இப்படியிருக்க, ஒரு அரசுப்பள்ளி, மாணவர்களின் சுமையைக் குறைத்து, அதன்மூலம் நல்ல பலன்களைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ளது மல்காபூர் கிராமம். மிகவும் பின்தங்கிய இந்த கிராமத்தில் வெறும் 350 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இங்கு செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 11 மாணவிகள் உட்பட 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தக் குழந்தைகளுக்காக, ‘சுமை இல்லாத சனிக்கிழமை’ என்ற புதிய திட்டத்தை பள்ளி நிர்வாகம் அறிமுகம் செய்தது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் மாணவர்களுக்கு விளையாட்டு, கைவினைப் பொருட்கள் செய்வது, ஓவியப் பயிற்சி போன்றவை கற்றுக்கொடுக்கப் படுகின்றன. அன்றைய தினம் மாணவர்கள் புத்தகச் சுமையைத் தூக்கிவரத் தேவையில்லை. வார இறுதியில் இதுபோன்ற பயிற்சிகள் கொடுக்கப் படுவதால், மாணவர்கள் மற்ற நாட்களில் சுறுசுறுப்பாக பள்ளிக்கு வருவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதேபோல், இந்தப் பள்ளியில் ‘நம் வார்த்தை வங்கி’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு நாளும் பள்ளியில் இருந்து வீட்டிற்குக் கிளம்பும் மாணவர்களுக்கு ஐந்து புதிய ஆங்கில வார்த்தைகளும், மராத்தியில் அவற்றிற்கான அர்த்தங்களும் கொடுத்தனுப்பப் படுகின்றன. மறுநாள் பள்ளிக்கு வரும் குழந்தைகள், தாங்கள் கற்றுக்கொண்ட வார்த்தைகளை ஒரு காகிதத்தில் எழுதி அதனை அங்கிருக்கும் பெட்டியில் போடவேண்டும். மாத இறுதியில் இந்தப் பெட்டியைத் திறந்து, யார் அதிகமான வார்த்தைகளைக் கற்றுக்கொண்டார் என்பதை அறிவித்து, பாராட்டவும் செய்கின்றனர்.

இதுமட்டுமா... விவசாயம், அதில் கிடைக்கும் மகசூல், ஈட்டிய லாபம் என பெற்றோருடன் மாணவர்கள் உரையாடி அதன்மூலம் கணிதப் பயிற்சி மேற்கொள்ளும் வழிமுறையை இந்தப் பள்ளி ஆசிரியர்கள் கற்றுத் தருகின்றனர். மேலும், பள்ளிக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் மாணவர்கள் விவசாயம் செய்கிறார்கள். அங்கு விளையும் காய்கனிகளை பள்ளி மதியஉணவில் பயன்படுத்துவதால், மாணவர்கள் தன்னிறைவு அடைவதைப் பார்க்க முடிவுகிறது என்கிறது பள்ளி நிர்வாகம்.

உடல் சோர்வு, மனச்சோர்வு இந்த இரண்டும் இல்லாத ஒரு பள்ளிச்சூழல் மிகவும் அத்தியாவசியமானது. அதுவும் சர்வதேச மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு, பல மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. இந்தத் தடைகளை எல்லாம் களைந்து, மாணவர்களை வளப்படுத்தும் இந்த அரசுப் பள்ளியை நாமும் வாழ்த்தலாம். 

Source Nakkeeran