. -->

Now Online

FLASH NEWS


Monday 10 February 2020

வைரலான புகைப்படத்தின் கிராத்தூரான் கவிதை 'மிருகாபிமானம்'



*மிருகாபிமானம்*

சகதிக்குள் விழுந்து விட்ட சகோதரனே கலங்காதே
காட்டுக்குள் வந்ததனால் விழுந்ததாக வருந்தாதே
எங்களுடைய காட்டுக்குள் வெளியில் மட்டும் தான் சகதி
உங்களுடைய நாட்டு மக்கள் உள்ளமெல்லாம் அன்றோ சகதி.

கைகொடுத்து உன்னை நான் கரை சேர்க்க உதவுகின்றேன்
கவலையின்றி மேலே வா, வீடு செல்ல உதவுகின்றேன்
வலைக்குள்ளே சிக்கவைத்து கூண்டுக்குள் அடைக்க மாட்டோம்
மனிதர் செய்யும் ஈனச் செயல் எதையும் நாங்கள் செய்யமாட்டோம்.

ஆபத்தில் இருப்பவரை புகைப்படங்கள் எடுப்பதில்லை
உதவுகின்ற செயலை விட்டு மறு செயலைச் செய்வதில்லை
பார்த்தும் பாராதது போல் சற்றே திரும்பிப் பார்
நம்மையும் அங்கொருவன் புகைப்படம் எடுப்பதைப் பார்.

மனிதாபிமானம் என்ற வார்த்தையை இனிச் சொல்லாதீர்
மிருகாபிமானம் என்ற புது வார்த்தை சொல்லிடுவீர்
மனிதர்கள் மிருகங்கள் செயல் செய்யத் துவங்கிவிட்டார்
மிருகங்கள் மனிதர்களாய் முன்னேறத் துவங்கிவிட்டார்.

தயக்கமின்றிக் கைநீட்டு கரை சேர்த்து விடுகின்றேன்
கள்ளமில்லா வெள்ளை உள்ளம் எங்களுக்கு சொல்கின்றேன்
நம்பிக்கைத் துரோகம் எங்கள் அகராதியிலே இல்லை
நம்ப வைத்து ஏமாற்ற......
நம்பவைத்து ஏமாற்ற நாங்கள் ஒன்றும் மனிதரில்லை.