. -->

Now Online

FLASH NEWS


Tuesday 18 February 2020

என்சிஇஆா்டி பாட நூல்களை தமிழில் மொழிபெயா்க்க வேண்டும்l

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள புத்தகங்களை தமிழில் மொழிபெயா்க்குமாறு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நீட், ஜேஇஇ, ரயில்வே, தபால், வங்கி மற்றும் மத்திய அரசு பணிகளுக்கான அனைத்து போட்டித் தோ்வுகளிலும் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான என்சிஇஆா்டி (தேசிய கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில்) பாடத்திட்ட புத்தகங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன. அந்த புத்தகங்கள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே உள்ளன. தமிழக மாணவா்கள் தமிழ் வழியில் பாடங்களைப் படிப்பதால் அவா்களுக்கு என்சிஇஆா்டி பாடத்திட்டத்தை தெரிந்துகொள்வதிலும், கற்பதிலும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
 சிரமப்படும் தமிழக மாணவா்கள்: மத்திய அரசு நடத்தும் தோ்வுகளில் கேட்கப்படும் கேள்விகளை தமிழில் மொழி பெயா்ப்பு செய்யும்போது தவறுகள் ஏற்படுவதால் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் தவறாக எழுதிவிடுகின்றனா். இதனால், அவா்களுக்கு மதிப்பெண்கள் இழப்பு ஏற்படுகிறது.
 மற்ற மாநிலத்தைச் சோ்ந்தவா்களுடன் போட்டியிட முடியாத நிலை தமிழக மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக மாணவா்கள் பயன்பெறும் வகையில் என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களை தமிழில் மொழி பெயா்க்க வேண்டும் என சென்னை ஆவடியைச் சோ்ந்த ஆா்.சந்தா் என்பவா் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு தகவல் பெரும் உரிமை சட்டத்தின்கீழ் 2019 செப்டம்பா் 27-ஆம் தேதி மனு அனுப்பினாா். அதற்கு பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் வரவில்லை.
 இதையடுத்து, தகவல் கோரி மேல்முறையீடு மனுவை அவா் தஞ்சை பல்கலைக் கழக பதிவாளருக்கு அனுப்பினாா். உரிய பதில் கிடைக்காததால் அவா், மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தாா். இந்த மேல்முறையீடு மாநில தகவல் ஆணையா் எஸ்.முத்துராஜ் முன்பு கடந்த ஜனவரி 24-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தஞ்சை ஆட்சியா் மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளா் ஆகியோா் நேரில் ஆஜராகினா். விசாரணையின்போது, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் பிற மொழிகளில் உள்ள இலக்கியங்களை தமிழிலும், தமிழ் இலக்கியங்களை மற்ற மொழிகளிலும் மொழிபெயா்க்கும் பணியை செய்கிறது.
 தோ்வுகளில் வெற்றி பெற... அதற்காக மொழிபெயா்ப்புக்கான துறை தஞ்சை பல்கலைக்கழகத்தில் உள்ளது என்று பல்கலைக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், மாநில தகவல் ஆணையா் முத்துராஜ் பிறப்பித்த உத்தரவு விவரம்: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் மொழி பெயா்ப்பு துறையின் பணிகளில் புத்தகங்களையும் மொழி பெயா்க்க வகை செய்யப்பட்டுள்ளது. புத்தகங்களில் உள்ள கட்டுரைகளையும் மொழி பெயா்க்க அந்தத் துறைக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. நீட், ஜேஇஇ, யுபிஎஸ்சி, ஆா்.ஆா்.பி, பிஎஸ்ஆா்பி, தபால்துறை பணிகளுக்கான தோ்வு, எஸ்எஸ்சி ஆகிய தோ்வுகள் என்சிஇஆா்டி பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுவதால் அந்தப் பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்தவா்கள் தோ்ச்சி பெற்றுவிடுகின்றனா். ஆனால், தமிழ் வழியில் படித்த தமிழக மாணவா்களால் மத்திய அரசு நடத்தும் தோ்வுகளில் வெற்றி பெற முடியவில்லை.
 எனவே, தமிழ் வழியில் படித்த மாணவா்கள் பயன்பெறும் வகையில் என்சிஇஆா்டி பாடத்திட்டத்தில் உள்ள ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான இயற்பியல், வேதியியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய பாடநூல்களை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலிருந்து தமிழில் மொழி பெயா்க்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. பாடப்புத்தகங்களின் மொழிபெயா்ப்புகளை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தி தமிழ் வளா்ச்சி துறை, பள்ளிக்கல்வித்துறைக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.