. -->

Now Online

FLASH NEWS


Thursday 4 June 2020

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் இருக்கும் இடத்திலேயே எழுத அரசு ஆவன செய்ய வேண்டும்



10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவ, மாணவிகள் இருக்கும் இடங்களிலேயே எழுதுவதற்கு தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் எனக் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சீனாவில் உருவாக்கப்பட்ட கரோனா தொற்று நோய் அணு ஆராய்ச்சி நிலையம் முதல், ஆப்பம் சுடும் பாட்டி வரை உலகத்தில் உள்ள அனைவரையுமே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது. மருந்தே இல்லாத நிலையில், கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. 10ஆம் வகுப்பு தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்ற நிலை அரசுக்கு உள்ளது. 10ஆம் வகுப்புக்கு நடத்தப்படாத தேர்வுகள் வரும் 15ஆம் தேதி முதல் தேர்வு நடத்த அரசு அறிவித்து, இன்று 4ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட்டையும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த அறிவிப்பானது மாணவ, மாணவிகள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் பெரிய அச்சத்தை உண்டாக்கியுள்ளது. ஒரு கல்வியாண்டில் மொத்த பள்ளி நாட்கள் 210 நாட்கள்தான். இந்த நாட்களுக்குள் 10, 11, 12 உள்ளிட்ட வகுப்புகளுக்குத் தேர்வுகள் நடந்து முடிந்து விடும். தற்போது, கரோனா தொற்று ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் இரண்டு மாதங்களுக்கு மேலாக தேர்வை தள்ளி வைக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

 தேர்வைத் தள்ளி வைப்பதாலும், மேலும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கும் உட்படும் நிலை உருவாகும். 
 தேர்வை ரத்து செய்து விட்டு, ஆண்டு இறுதியில் நடைபெற்ற திருப்புதல் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் அதிகப்பட்ட மதிப்பெண்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் அடிப்படையில், பதினொன்றாம் வகுப்புக்கான சிறப்புப் பாடத்தைத் தேர்வு செய்ய முடியும். திருப்புதல் தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு என்ன செய்வது என்ற ஒரு சந்தேகம் எழும். திருப்புதல் தேர்வுக்கு வராதவர்களுக்குத் தேர்ச்சிக்கான மதிப்பெண்களை அவர்களுக்கு வழங்கி, தேர்ச்சி அளிக்கலாம்.
 தேர்வு தொடர்பாக தினம் ஒரு அறிவிப்பு வருவதால், கல்வித்துறையின் நம்பகத்தன்மை பொதுமக்களிடம் விமர்சனத்திற்கு உட்பட்டு வருகிறது. இதனையும் கருத்தில் கொண்டு, இனி மாணவர்களைத் தேர்வு, தேர்வு என்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் தேர்வை ரத்து செய்யலாம். தேர்வு எழுதித்தான் ஆக வேண்டும் என்றால், உரிய பாதுகாப்புடன் தற்போது உள்ள சூழலில் மாணவ, மாணவிகள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளிலேயே தேர்வு எழுத தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் அல்லது தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு, இறுதியாக நடந்த திருப்புதல் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண் என அதிகமோ அதைக் கணக்கிட்டுக் கொள்வது சாலச் சிறந்தது. 
 இதை வைத்து பதினொன்றாம் வகுப்பிற்கான விருப்பப் பாடத்தை எடுத்துத் தேர்வு செய்ய மாணவர்களை அனுமதிக்கலாம். 

தமிழகத்தில், சுமார் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும் நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் கரோனா தொற்றால் ஊரு விட்டு ஊர் சென்றுள்ளனர். மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றுள்ளனர். மாணவ, மாணவிகள் படிப்பது ஒரு பள்ளியில், தேர்வு எழுதும் மையம் மற்றொரு பள்ளியில். இந்நிலையில் கரோனா தொற்றால் வேறொரு மாவட்டத்தில் உள்ளனர்.
 தற்போது, தேர்வு எழுத வர வேண்டும் என்றால், மாணவர்களுடன், பெற்றோர்களும் மாவட்டம் விட்டு, மாவட்டம் வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர்கள் எங்கு தங்குவது, எங்கு சாப்பிடுவது. உறவினர்களே அனுமதிக்க முடியாத நிலை. மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் வருவதால் தனிமைப் படுத்தப்பட வேண்டிய நிலை. 
 கரோனா தொற்று ஏற்படும் அபாயமும் உருவாகும். இவற்றைப் போக்க வேண்டும் என்றால், அந்தந்த ஊரிலேயே 10 ஆம் வகுப்புக்கான ஹால் டிக்கெட்டை வைத்துக் கொண்டு, அங்குள்ள பள்ளிகளிலேயே தேர்வு எழுதச் சொல்லி அரசு உத்தரவிடலாம். தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்பது மாணவர்களுக்கு மன உளைச்சலைத் தருகிறது. தேர்வைத் தள்ளி வைப்பதாலும் மாணவர்களுக்கு மன உளைச்சலைத்தான் ஏற்படுத்துகிறது. இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, மாற்று ஏற்பாட்டை மேற்கொள்வது பெரும் பாதுகாப்பைக் கொடுக்கும் எனக் கல்வியாளர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

Source Dinamani