. -->

Now Online

FLASH NEWS


Sunday 28 June 2020

கொரோனா பாதிப்பு வேகம் அதிகரிப்பதால் தமிழகத்தில் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிப்பு?... மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு நாளை மாலை முதல்வர் அறிவிக்க திட்டம்


 தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதால் ஜூலை 1ம் தேதியில் இருந்து 31ம் தேதிவரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு நாளை மாலை முதல்வர் எடப்பாடி இது குறித்து அறிவிக்க திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற 30ம் தேதியுடன் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. கடந்த 96 நாட்கள் ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. கடைகள் திறக்கலாம், தொழிற்சாலைகள் இயங்கலாம், ஆட்டோ, டாக்சி ஓடலாம், அரசு-தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. 
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. இதையடுத்து கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தளர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மக்கள் வீடுகளிலேயே மீண்டும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதேபோன்று மதுரை மாவட்டத்திலும் கடந்த 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களிலும் இன்று (ஞாயிறு) எந்த தளர்வுகளும் இல்லாமல், அதாவது ஒரு கடை கூட திறக்கப்படாமல் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கடந்த 24ம் தேதி அறிவித்தார். அப்படியே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 
இதனால் வெளிமாவட்டங்களில் வேலைக்கு கூட வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இப்படி, தமிழக அரசு தினசரி புதிய புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் 30ம் தேதியுடன் (நாளை மறுதினத்துடன்) முடிவடைகிறது. அதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு  ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்டு மீண்டும் சகஜநிலை திரும்புமா? அல்லது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்னென்ன தளர்வுகள் கிடைக்கும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் கடந்த 24ம் தேதி முதல்வர் எடப்பாடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர்கள் பல்வேறு கருத்துக்களை அரசுக்கு தெரிவித்துள்ளனர். 
அதேபோன்று, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை கைவிடுவதா? என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. தினசரி அதன் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.
குறிப்பாக தமிழகத்தில் நேற்று மட்டும் 3,713 பேர் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1,939 பேர். முக்கியமாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை மறுதினத்துடன் ஊரடங்கை முடித்துக்கொள்ள முடியாது. 
மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஜூலை இறுதி வரை ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது. அதேபோன்று மத்திய அரசும் ரயில் போக்குவரத்தை ஜூலை மாதம் 15ம் தேதி வரை ரத்து செய்துள்ளது. அதனால், தமிழகத்திலும் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றே சுகாதாரத்துறை சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். 

நாளை மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி, காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். அந்த குழுவும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றுதான் பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனாலும், முழு ஊரடங்கு என்று இல்லாமல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தமிழகத்தில் மேலும் நீட்டிக்கப்படும்” என்றார்.
இந்த நிலையில் தமிழக வணிகர்கள் சங்கம், ஜூலை 1ம் தேதியுடன் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். கடந்த 26ம் தேதி திருச்சியில் பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடியும், 29ம் தேதி மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். மேலும் மத்திய அரசு என்ன ஆலோசனை வழங்குகிறது என்பதை பொறுத்த தமிழகத்தில் ஊரடங்கு அறிவிப்பதா? தளர்த்துவதா? என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று கூறினார். அதனால் தமிழக அரசு என்ன முடிவு அறிவிக்க உள்ளது என்பது குறித்து நாளை மாலை அதிகாரப்பூர்வமாக தெரியவரும். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Source Tamil Murasu