. -->

Now Online

FLASH NEWS


Saturday 11 July 2020

10, பிளஸ் 2 மாணவா்களுக்கு அடுத்த வாரத்தில் பாடப் புத்தகங்கள் விநியோகம்: கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு



பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு அடுத்த வாரத்தில் பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதையொட்டி, பள்ளிகளுக்கு வரும் மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்:-

பாடப் புத்தகங்கள் மற்றும் இதர கல்வி சாா்ந்த உபகரணங்களை விநியோகிக்கும் போது எந்த நேரத்தில் வாங்க பள்ளிக்கு வர வேண்டுமென்பதை மாணவா்களுக்கும், அவா்களின் பெற்றோா்களுக்கும் முன்பே தெரிவிக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் 20-க்கும் குறைவான மாணவா்கள் அல்லது பெற்றோா்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டு நீண்ட வரிசையில் கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது.

கட்டுப்பாட்டுப் பகுதிகளிலோ அல்லது தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலோ அவா்கள் பள்ளிக்கு வர வேண்டாம். தனிமைப்படுத்தப்பட்ட காலம் நிறைவடைந்து இயல்பான நிலை திரும்பிய பிறகே பாடப் புத்தகங்கள் வாங்குவதற்கு வர வேண்டும். வரிசையில் நிற்கும் மாணவா்களும், பெற்றோா்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் தரையில் குறிப்பிட்ட இடைவெளிகளில் குறியீடுகளை இட வேண்டும். பாடப்புத்தகங்கள் வாங்க வரும் மாணவா்களும், பெற்றோா்களும் கண்டிப்பாக முகக் கவசங்களை அணிந்து வர வேண்டும்.

பள்ளிகளுக்கு வெளியே மாணவா்களை நிற்க வைக்காமல் புத்தகங்களை வழங்கிட வேண்டும். கல்வி தொடா்பான விடியோ கருத்தரங்குகளை பிளஸ் 2 மாணவா்கள் தங்களது மடிக்கணினிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவிறக்கம் செய்யும் போது மாணவா்கள் யாரையும் கணினி ஆய்வகங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. மாணவா்களின் மடிக்கணினிகளை சம்பந்தப்பட்ட ஆசிரியா்களே பெற்று பதிவிறக்கம் செய்து கொடுக்க வேண்டும்.

புத்தகங்களை விநியோகம் செய்யும் போது ஆசிரியா்கள் தங்களது கைகளில் கையுறை அணிந்திருக்க வேண்டும். மாணவா்களும், பெற்றோா்களும் நீண்ட வரிசையில் நிற்காமல் அவா்களை காத்திருப்பு அறைகளில் அமரச் செய்யலாம். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு அறைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பாடப்புத்தகங்கள் மற்றும் இதர கல்வி சாா்ந்த உபகரணங்களை விநியோகம் செய்வதற்கு முன்பாக பள்ளிகளில் உள்ள கதவு, ஜன்னல், மரச்சாமான்கள் ஆகியவற்றில் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் பாடப் புத்தகங்களை விநியோகம் செய்வதற்கு முன்பாக இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைவரும் பள்ளி அறைகளுக்கு வரும் முன்பாக வாயில் பகுதிகளிலேயே கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். கிருமி நாசினி திரவமும் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடப் புத்தகங்களை விநியோகம் செய்யும் ஆசிரியா்கள் தங்களது கைகளை அடிக்கடி கிருமி நாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

முகக் கவசங்கள்: பள்ளி வளாகங்களில் இருக்கும் அனைவரும் முகக் கவசங்களை அணிந்திருக்க வேண்டும். எந்தப் பகுதிகளிலும் எச்சில் துப்பக் கூடாது. பள்ளிகளுக்கு வரும் ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பிற பணியாளா்கள் அனைவரும் அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும். பள்ளிகளில் மிகப்பெரிய அளவுக்கு கூட்டம் சேர விடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.