. -->

Now Online

FLASH NEWS


Friday 31 July 2020

வேலையிழந்த ஆசிரியருக்கு உணவகம் கட்டிக்கொடுத்த மாணவர்கள்



தெலங்கானாவில் கரோனா பொது முடக்கத்தால் வேலை இழந்த ஆசிரியருக்கு அவரது மாணவர்கள் சேர்ந்து உணவகம் கட்டிக் கொடுக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
 கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடிக் கிடக்கும் நிலையில், 52 வயது ஆசிரியர் ஹனுமந்துலா ரகு வேலையிழந்து தவித்து வந்தார். இந்த தகவலை அவரிடம் படித்து தற்போது நல்ல நிலையில் இருக்கும் மாணவர்களின் காதுகளுக்குச் சென்றடைந்தது.
 உடனடியாக அனைவரும் கைகோர்த்து, தனது ஆசிரியரின் வாழ்வாதாரத்தை சிறக்க வைக்க சொந்தமாக உணவகம் கட்டிக் கொடுத்துள்ளனர்.
 வாசற்கதவைத் தட்டும் மாதச் செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கலங்கிய ஹனுமந்துலாவின் கதவை கஷ்டங்களுக்கு முன்பே அவரிடம் படித்த மாணவர்களின் ஒருமித்த கரங்கள் தட்டியதும், தற்போது உணவகம் உருவாகியுள்ளது. அந்த உணவகத்துக்கு குருதட்சிணை என்று பெயரிடப்பட்டுள்ளது.
 ஜக்தியால் மாவட்டம் கொருட்லா பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஹனுமந்துலா. இவருக்கு ஒரு மகன் உள்ளார். பி.எட். முடித்துவிட்டு, அரபு நாடுகளுக்குச் சென்று பணம் ஈட்டி வந்த அவரும், பொது முடக்கம் காரணமாக நாடு திரும்பி வேலையில்லாமல் தவித்து வருகிறார்.
 இது பற்றி அறிந்த அவரிடம் 1997 - 98ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் தங்களுக்குள் வாட்ஸ்அப் குழுவை ஏற்படுத்தி, அதன் மூலம் ஆசிரியரின் நிலையை எடுத்துச் சொல்லி பணம் திரட்டியுள்ளனர்.
 என்னைக் காப்பாற்ற வந்த மாணவர்களின் உதவியை வெளிப்படுத்த ஒரு வார்த்தையும் இல்லை என்கிறார் ஹனுமந்துலா.
 தங்களுக்கு ஆங்கிலமும், உயிரியலும் கற்பித்த ஆசிரியரை மறக்காமல், அவருக்கு உற்ற நேரத்தில் உறுதுணையாக இருந்துள்ளனர். உணவகம் செயல்பட்டுக்கு வந்துவிட்டதோடு மட்டுமல்லாமல், அதற்கு வாடிக்கையாளர்களைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பையும் மாணவர்களே எடுத்துக் கொண்டுள்ளனர்.  
Source Dinamani