. -->

Now Online

FLASH NEWS


Monday 6 July 2020

இந்தியாவில் கொரோனா இல்லாத ஒரே இடம் லட்சத்தீவுகள்..!


உலகளவில் கொரோனா பாதிப்பில் 3 வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத யூனியன் பிரதேசமாக லட்சத்தீவுகள் இருந்து வருகிறது.

இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளில் சுமார் 64 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கொச்சியில் இருந்து 380 கி.மீ தொலைவில் அமைந்துள்ள 36 குட்டித் தீவுகளின் கூட்டமான லட்சத்தீவுகளில் இதுவரை ஒரு கொரோனா தொற்று பாதிப்பு கூட பதிவாகவில்லை. இந்தியாவில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு ஐந்து மாதங்களை கடந்த நிலையில், லட்சத்தீவுகள் கொரோனா தொற்று இல்லாத திகழ்வதற்கு, மிகச்சிறந்த முறையில் கண்காணிப்பதும், நன்கு திட்டமிட்டப்பட்டு கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றுவதே காரணமாகும்.

இது குறித்து கவரட்டியின் துணை கலெக்டரான காசிம் கூறுகையில், ‘சுமார் 1,000 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை காரணங்களுக்காக இந்தியாவுக்கு சென்றிருந்தனர். அவர்களின் விவரங்களை பட்டியலிட்டு, திட்டமிடப்பட்ட முறையில் திரும்ப அழைத்து வரப்பட்டனர். குறிப்பாக, லட்சத்தீவை பூர்விகமாக கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் போன்ற வெளியாட்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. லட்சத்தீவை சேர்ந்தவர்கள் திரும்புவதற்கு முன்னர் கொச்சியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஏழு நாட்களுக்கு பிறகு, அனைவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லையென வந்தால் மட்டுமே கப்பலில் திரும்ப அனுமதிக்கப் பட்டனர். மேலும் லட்சத்தீவு திரும்பிய பின்னர், வெளியில் இருந்து வந்தவர்கள் தங்களது வீடுகளில் 14 நாட்களில் தனிமைப்படுத்தி கொள்வது கட்டாயமாக பின்பற்றப்பட்டது. குறைவான மக்கள் தொகை என்பதால், எளிதாக கையாள முடிந்தது.
லட்சத்தீவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் மூன்று வேலையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் தேவைப்படலாம் என்பதால் கவரட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் 20 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

வாரத்திற்கு இரண்டு முறை கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்கு படகுகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இன்னமும் லட்சத்தீவுகளை சேர்ந்த சுமார் 200 முதல் 300 பேர் கொச்சியில் உள்ளனர். வேறு பகுதியில் உள்ளவர்களும் வரும் நாட்களில் திரும்ப கூடும். கொரோனா நடைமுறைகளை நிறைவேற்றிய பின்னரே, அவர்கள் கப்பல்களில் திரும்ப அனுமதிக்கப்படுவர் ‘ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஊரடங்கு தளர்வுக்கு பின் சுமார் 6 ஆயிரம் பேர் லட்சத்தீவில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும், யூனியன் பிரதேச நிர்வாகம் முழுமையாக பாதுகாப்பாக கருதும் வரை அவர்கள் மீண்டும் நுழைவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. லட்சத்தீவுகள் துறைமுக கப்பல் மற்றும் விமான இயக்குநரகத்தின் துணை இயக்குனர் ஷகீல் அகமது கூறுகையில்,’ ஊரடங்கு தளர்விற்கு பின் சுமார் 70 முதல் 80 முறை இரு மார்க்கமாக படகுகள் இயக்கப்பட்டன. பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநபர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப பயன்படுத்தினர்’ என்றார்.

Source Dinamalar