. -->

Now Online

FLASH NEWS


Tuesday 11 August 2020

கண்ணா வருவாயா -சிறப்பு கவிதை


எங்கே தான் இருக்கின்றாய் கண்ணா கார்வண்ணா
எப்போது வெளிப்படுவாய் எங்களது முன்னால்
புதியதோர் கீதை வேண்டும் தருவாயா கண்ணா
பார்த்தன்கள் தெளியட்டும் இனியாவது உன்னால்.

அப்பிறவியில் தர்மத்தை நிலைநாட்டி நின்றாய்
முற்பிறவியில் செய்ததற்கும் தண்டனையை ஏற்றாய்
எப்பிறவி எடுத்தாலும் பாடம் ஒன்று சொன்னாய்
அப்படியே இப்போதும் வருவாயா கண்ணா.

அதர்மமும் அநீதியும் தலைதூக்கி நின்றால்
தலையெடுக்க வருவதாகச் சொன்னாயே கண்ணா
நடப்பதெல்லாம் நீதி தானா சொல்லு நீ மன்னா
நீதி இன்று யார் கையில் தெரியவில்லை கண்ணா.

துகிலுரிக்கும் துரியோதன துச்சாதனன்கள்
கண்ணிருந்தும் பார்க்காமல் திருதராஷ்டிரர்கள்
அண்ணா அண்ணா என அலறும் திரௌபதிகள்
கண்ணா என அழைக்காததால் வரவில்லையா கண்ணா.

காளிந்தி போல் நதிகள் இல்லை அது தான் உன் குறையா
தூக்கிப்பிடிக்க மலைகள் இல்லை அழித்தது தான் தவறா
கண்ணீரோ நதியளவு, கவலைகளோ மலையளவு
ஈடுசெய்யும் கண்ணா, வருவாயா கார் வண்ணா.

*கிராத்தூரான்