. -->

Now Online

FLASH NEWS


Wednesday 28 October 2020

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் திறக்க நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் அரசு அறிவித்த ஊரடங்கு வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்திலும் வருகிற நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரம், பொதுமக்களின் வசதிக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.45 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று படிபடிப்பாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக் தேர்வு செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நோய் கடுமையாக இருந்தால் மேல் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் சிறப்பான சேவையால் நோய் தொற்று 7.39 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வரப்பட்டு நோய் பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 17 நாட்களாக ஒவ்வொரு நாளும் நோய் தொற்று எண்ணிக்கை 5 ஆயிரம் நபருக்கும் கீழ் உள்ளது. கடந்த 4 நாட்களாக 3 ஆயிரம் நபருக்கு கீழாக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக குறைந்துள்ளது. 1.53 சதவீதம் இறப்பு மட்டுமே உள்ளது. இறப்பை குறைக்க மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் கூட 55 புதிய தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனி நபர் வருவாய் படிப்படியாக அதிகரித்து வருகிறது. திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து திரையரங்குகளை திறக்க கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளது. அதுபற்றி தற்போது நடைபெறும் மாவட்ட கலெக்டர் கூட்டம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழு ஆய்வு கூட்டத்துக்கு பின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆட்சி தலைவர்கள் கூறும் கருத்தின் அடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு தானிய அங்காடிகள், காய்கறி மொத்த மார்க்கெட்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதை 7,500 வியாபாரிகள் தினமும் பயன்படுத்தி வருகிறார்கள். தினசரி கிருமி நாசினி, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற இடங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து நோய் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தற்காலிகமாக செயல்படும் பழக்கடை, மொத்த வியாபாரம், சில்லறை கடைகள் திறக்க கோரிக்கைகள் வருகிறது. 
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தீபாவளி போன்ற பண்டிகை வருவதால் பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தொடர்ந்து கண்காணித்து தொற்று ஏற்படாத வண்ணம் முக கவசம், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்தும் இன்றைக்கு மாவட்ட ஆட்சி தலைவர்கள் சொல்கின்ற ஆலோசனைகள், மருத்துவ நிபுணர்கள் சொல்கின்ற ஆலோசனைபடி அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட  கலெக்டர்களுடன் ஆலோசனை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது. கலெக்டர்களுடனான ஆலோசனை முடிந்த பிறகு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். 
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள்  அரசுக்கு அளிக்கும் ஆலோசனைகளை தொடர்ந்து தமிழகத்தில் வருகிற நவம்பர் 1ம்  தேதி முதல் கூடுதலாக என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து  இறுதி முடிவு செய்யப்படும். அதைத்தொடர்ந்து இன்று மாலை அல்லது நாளை  தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட உள்ள புதிய தளர்வுகள் குறித்து முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க  திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 5 மாதத்திற்கு மேல் திறக்கப்படாமல் உள்ள பள்ளி, கல்லூரிகள் நவம்பர் மாதம் திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதேபோன்று, பல்வேறு நிபந்தனைகளுடன் நவம்பர் 1ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Source Tamil Murasu