. -->

Now Online

FLASH NEWS


Tuesday 28 May 2019

அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்தவேண்டும்:வட்டாரக்கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.

          

புதுக்கோட்டை,மே,28-  அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்க பள்ளித்தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்களுக்கு வட்டாரக்கல்வி அலுவலர்கள் தூண்டுகோலாக இருந்து செயலாற்றவேண்டும்   என்று வட்டாரக்கல்வி அலுவலர்களுக்காக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேசும்போது கூறியதாவது: 2019-2020ஆம் கல்வியாண்டிற்கு அரசுப்பள்ளிகளில்  இதுவரை  வகுப்பு வாரியாக சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்கள் விபரத்தினை ஒவ்வொரு வட்டாரக்கல்வி அலுவலரும் தெரிவிக்கவேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 84 அரசு நடுநிலைப்பள்ளிகளிலும் எல்.கே.ஜி,யூ.கே.ஜி வகுப்புகளில் ஆங்கில வழிக்கல்வியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை ஒவ்வொரு வட்டாரக்கல்வி அலுவலரும் மேற்பார்வையிட்டு உறுதி செய்தல்வேண்டும். அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக கல்வித்துறையால் தொடங்கப்பட்டுள்ள  கல்வித்தொலைக்கான செட்டாப் பாக்ஸினை கேபிள் டி.வி வட்டாட்சியரை அணுகி பெறவேண்டும்.நடுநிலைப்பள்ளிகளிலும் ஆசிரியர் வருகைப்பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட இருக்கிறது. இதற்கான முன் ஆயத்தப்பணி மேற்கொள்ளப்படவேண்டும். குடிநீர் வசதி தேவைப்படும் பள்ளிகளுக்கு அந்தந்த பள்ளி எல்லைக்குட்பட்ட  சட்டமன்ற உறுப்பினரை அணுகி அவரது நிதியில்  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிக்கான ஏற்பாட்டினை மேற்கொள்ளப்படவேண்டும். வருகிற ஜூன் 3-ந்தேதி அன்று வரும் கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கப்பட உள்ளதால் அரசு நலத்திட்டங்களை  குறித்த நாளில் மாணவர்களுக்கு வழங்குதல், வகுப்பறைத்தூய்மை,கழிப்பறைத்தூய்மை,வளாகத்தூய்மை ஆகியவை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்க பள்ளித்தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் ஆகியோருக்கு வட்டாரக்கல்வி அலுவலர்கள் தூண்டுகோலாக இருந்து செயலாற்றவேண்டும்.இந்த ஆண்டு ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சார்ந்த நலத்திட்டங்கள் எமிஸ்( கல்வி தகவல் மேலாண்மை முறைமை)மூலம் நடைபெற இருப்பதால் அவரவர் எல்லைக்குட்பட்ட பள்ளிகளின் விபரப்பட்டியல்,ஆசிரியர்கள் விபரம், மாணவர்களின் விபரம் ஆகியவை எமிஸ் இணைய தளத்தில் 100சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்தல்வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் கே.குணசேகரன், புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் எஸ். ராகவன்,அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் எஸ். அமுதாராணி,முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள்,பள்ளித்துணை ஆய்வாளர்கள்,வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.