. -->

Now Online

FLASH NEWS


Monday 26 August 2019

மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அதிகாரம்! தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைக் கண்காணிப்பர்*

தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைக் கண்காணிக்க, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் இந்த உத்தரவால் வட்டார அளவில் பணியாற்றும் இருபால் ஆசிரியர்களும் கலக்கமடைந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறை இயக்ககத்தின் கீழ் 27,895 தொடக்கப் பள்ளிகளும், 9,134 நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், சுமார் 30 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். 1.50 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. புதிய பாடத் திட்டங்களால் ஆசிரியர்கள் திணறி வரும் சூழலில், அறிவிப்புகள் ஆசிரியர்களைக் கலக்கமடையச் செய்கின்றன என்றே கூறலாம்.

அந்த வகையில், ஆகஸ்ட் 20 -ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணை எண்: 145-இல், புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனியாக தலைமையாசிரியர்களும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு தனியாக தலைமையாசிரியர்களும் பணியில் உள்ளனர். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதி, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால், தொடக்கக் கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இரு ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஒருவர் விடுப்பிலோ, பயிற்சிக்காகச் சென்றாலோ, மற்றவர் அந்த வகுப்புகளையும் சேர்த்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவ, மாணவியரின் கல்வித்திறன் பாதிப்புக்குள்ளாகிறது. இதுபோன்ற சூழலைத் தவிர்க்க, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், ஒரே வளாகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்வு செய்து, அங்கு ஆசிரியர்கள் பணியில் இல்லாத சூழலில், தங்களது பள்ளியில் இருந்து ஆசிரியர்களை அனுப்பி, மாணவர்களுக்கு கற்றல் திறனை அளிக்க வேண்டும்.

விளையாட்டு, ஆய்வகம் போன்றவற்றை தொடக்கப் பள்ளி மாணவர்களும் பயன்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், கீழ் நிலை ஆசிரியர்களுடன் பணியாற்றும்போது தங்களது பணி அனுபவங்கள், உயர் சிந்தனைகள், கருத்துப் பரிமாற்றங்களுக்கு வசதியாக அமையும். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டி ஆகியவற்றை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி வகுப்புகள் உள்ளதால், அவற்றை தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களும் பார்த்து படித்து பயன்பெறவும் வசதியாக இருக்கும். ஒரே வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கண்காணிக்கும்போது மாணவர்களின் பாதுகாப்பு மேம்படும்.

இந்த புதிய அறிவிப்பால் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. தலைமையாசிரியர்கள் தொடர்ந்து அதே பதவி மற்றும் ஊதிய விகிதத்துடன் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணியாற்றி வருவர். ஊதியம் மற்றும் பணப் பலன்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாகவே தொடர்ந்து வழங்கப்படும். குறிப்பாக, தொடக்க, நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், இதர வகுப்பாசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தாலோ, வரையறுக்கப்பட்ட விடுப்புக்கோ அனுமதி வழங்கும் அதிகாரம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. இதர விடுப்புகளை, தலைமையாசிரியர் வழியாக உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகள் மாணவர்களுக்கு சரியான முறையில் சென்றடைன்றனவா என மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும். குறைபாடுகள் ஏதேனும் தெரியும்பட்சத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு புகாராகத் தெரிவிக்கலாம்.

உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டுமெனில், அது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பரிந்துரை செய்யலாம். இவ்வாறான அதிகாரங்கள் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் என்.ரெங்கராஜன் விடுத்துள்ள அறிக்கை: ஒரே வளாகத்தில் செயல்படும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை, அதே வளாகத்தில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அரசாணை எண்:145-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறான அறிவிப்பு மாணவர் நலனுக்கு எதிராக அமையும். குழந்தைப் பருவ மாணவர்களை, இளம்பருவ மாணவர்களோடு இணைத்து பயிலச் செய்வது சரியாக இருக்காது. அறிவியல் ஆய்வகம் என்பது கவனத்தோடு கையாளக் கூடிய ஒன்று. அங்கு சென்று குழந்தைகளை விட்டால், அது கல்வி நலன் சார்ந்ததாக இருக்காது. கல்விக் கொள்கையில் மாற்றம் செய்து, தொடக்கப் பள்ளிகளுக்கு 5 ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளிகளுக்கு 8 ஆசிரியர்கள் என்ற முறையைக் கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சியை எடுக்காமல், ஆசிரியர்களை அச்சத்திலேயே வைத்து மனரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு சமமாகும். ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து, உரிய ஆலோசனைகளைப் பெற்று புதிய அறிவிப்புகளை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியது; புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கூட்டம் நடத்த வேண்டும். அதேபோல், தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தனியாக கூட்டம் நடத்த வேண்டும். ஒரே வளாகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் செயல்படுவது என்பது அதிகம் இருக்க வாய்ப்பில்லை. கிராமப் பகுதிகளாக இருந்தால், அங்கு எவ்வாறு இந்த நடைமுறையைச் செயல்படுத்துவது, நகர்ப்புறமாக இருந்தால் அதனை எப்படிக் கையாளுவது போன்றவை குறித்து ஆலோசிக்க வேண்டும். இதனால் ஏற்படும் தேவையற்ற சிக்கல்களைக் களைய வேண்டும். இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வருவதற்கு சற்று கால தாமதமாகலாம் என்றனர்.

- எம்.மாரியப்பன்