. -->

Now Online

FLASH NEWS


Monday 25 November 2019

குரூப்-2 தேர்வு முறை எப்படி இருக்கலாம்; தேர்வு எழுதுபவர்கள் கருத்தைக் கேட்கிறது டிஎன்பிஎஸ்சி



குரூப்-2 தேர்வு முறையை டிஎன்பிஎஸ்சி மாற்றி அமைத்தது. இதற்கு வரவேற்பும், விமர்சனமும் எழுந்தது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வை எப்படி நடத்தவேண்டும் என விரும்புகிறார்கள் என தேர்வாணையத்தில் நிரந்தரப்பதிவு (One Time Registration) செய்த விண்ணப்பதாரர்கள் தங்களது கருத்தை தெரிவிக்க டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியளர் தேர்வாணையம் தரப்பில் இன்று வெளியான செய்திக்குறிப்பு:

“தமிழ்நாடு அரசுப்பணியளர் தேர்வாணையம் அண்மையில், குரூப்-II மற்றும் குரூப்-IIA -ல் அடங்கிய பணிகளுக்கு முதல் நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு நடத்த முடிவு செய்து அதற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை வெளியிட்டது.

முதல் நிலைத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாட கேள்விகளை நீக்கிவிட்டு, பொது அறிவு சார்ந்த 200 கேள்விகள் மட்டுமே கேட்கப்படும் எனவும், முதன்மை எழுத்துத் தேர்வில் மொழிபெயர்ப்பு, பொருள் உணர்திறன், சுருக்கி வரைதல், கடிதம் எழுதுதல் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தேர்வர்களின் நலன் கருதி முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்வாணையம் சில மாற்றங்கள் செய்தது. அதன்படி, மொழிபெயர்ப்பு பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டு தனித் தாளாக நடத்தவும் அதில் குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற வேண்டும் எனவும், அம்மதிப்பெண், தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.

இம்முடிவினை பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்ற போதும், ஏற்கனவே இத்தேர்வுக்காக பழைய தேர்வுத்திட்டத்தின் படி தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு சில மாணவர்கள், குரூப்-II மற்றும் குரூப்-IIA ஆகிய பதவிக்கான தேர்வுகளை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, குரூப்-II மற்றும் குரூப்-IIA தேர்வுத்திட்டங்கள் குறித்து இணைய தளம் மூலம் தேர்வர்களின் கருத்துக்களைப்பெற தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, கருத்துக்களைப்பதிவு செய்வதற்கான வினாப் பட்டியல் தேர்வாணைய இணைய தளத்தின் (www.tnpsc.gov.in and www.tnpscexams.in) முகப்புப் பக்கத்தில் “ ஒருங்கிணைந்த குரூப்-II மற்றும் குரூப்-IIA தேர்வு தொடர்பான வினாப் பட்டியல்” (Questionnaire for Combined Group-II and IIA Exam) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வாணையத்தில் நிரந்தரப்பதிவு (One Time Registration) செய்த விண்ணப்பதாரர்கள் தங்களது பயனாளர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து வினாப்பட்டியலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தங்கள் கருத்துக்களை 25.11.2019 முதல் 01.12.2019 பதிவு செய்யலாம்.

ஒருவர் ஒருமுறை மட்டுமே தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய இயலும் என்பதால் கேள்விகளை முழுமையாக உள்வாங்கி அதற்கு பதில் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு தமிழ்நாடு அரசுப்பணியளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Source: The Hindu Tamil