சென்னையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் பிற்பகலுக்கு பிறகு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 500க்கும் மேற்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சென்னை மாநகர் முழுவதும் 33 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் நடத்தும் ஆய்வில் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த வாகனங்களை திருப்பி ஒப்படைக்கும் நடைமுறை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. சென்னை உட்பட அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் உரிய ஆவணங்களை காட்டி வாகனங்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போலீசார் இன்று முதல் வாகன சோதனையில் மேலும் தீவிரம் காட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. பிற்பகலுக்கு பிறகு சாலைகளில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்களை கைது செய்வதுடன், அவர்களின் வாகனங்களை பாரபட்சமின்றி பறிமுதல் செய்ய போலீசிஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி இன்று பிடிபடும் வாகனங்கள் உடனடியாக பொதுமக்கள் திரும்ப பெறமுடியாது. ஊரடங்கு பரபரப்பு முடிந்தபிறகே பொதுமக்கள் தங்களது வாகனங்களை பெறமுடியும். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சென்னையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளது. வருகிற 3-ந் தேதி வரையில் ஊரடங்கு சமயத்தில் வெளியில் வாகனங்களில் சுற்றுபவர்களை பிடிப்பதுடன் அவர்களது வாகனங்களை பிடித்து, போலீஸ் நிலையங்களிலேயே நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இனி வெளியில் சுற்றுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் கொரோனா பரபரப்பு எப்போது அடங்குகிறதோ அப்போதுதான் தங்களது வாகனங்களை திரும்பப் பெற முடியும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அப்போதுதான் போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 80 சதவிகித வாகனங்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக சொந்தமாக கார்கள் வைத்திருப்பவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தினமும் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனை கட்டுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி தேசிய நெடுஞ்சாலைகளிலும் தீவிரமாக கண்காணிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Source : Maalaimalar