. -->

Now Online

FLASH NEWS


Thursday 14 May 2020

பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட ஏன் இவ்வளவு அவசரம்?'- புதுப்புது குழப்பங்களால் கலங்கும் பள்ளிக்கல்வித்துறை விகடன்..... தினேஷ் ராமையா



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி தொடங்கும் எனத் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக உலக அளவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் மார்ச் 25-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. மூன்றாம் கட்ட பொதுமுடக்கம் வரும் 17-ம் தேதி நிறைவடைய இருக்கும் நிலையில், புதிய விதிமுறைகளுடன் நான்காம் கட்டமாகப் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாகப் பள்ளி, கல்லூரிகளில் நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்தநிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி தொடங்கும் எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாகப் பள்ளி, கல்லூரிகளில் நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்தநிலையில், 10-ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரலில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தன. ஊரடங்கு காரணமாக அது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என்றது தமிழக அரசு.

அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் வெளியிட்டார்.

 அதன்படி, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து, தினம்தோறும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த சூழலில் அவசர அவசரமாக இந்தத் தேர்வை நடத்த வேண்டிய தேவை என்ன என்று அரசியல் கட்சிகள் முதல் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

 மேலும், தேர்வை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என்றும் எதிர்ப்புக் குரல் வலுத்து வருகிறது.

*கடந்த 2 மாதங்களில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த 9 திட்டங்களின் நிலை என்ன?*

இந்தநிலையில், `எப்படியாவது தேர்வை நடத்தி முடித்தால் போதும்' என்ற எண்ணத்தில் பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுதொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

``கொரோனா பாதித்தவர்களைத் தனிமைப்படுத்துவதற்காகப் பள்ளிகளைக் கொடுக்குமாறு சென்னை மாநகராட்சி சமீபத்தில் கோரியது. இதற்கு சில பள்ளிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்ததும், பேரிடர் கால சூழ்நிலையில் அரசுக்கு அதை எடுத்துக் கொள்வதற்கான அதிகாரம் இருக்கிறது என்று பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து, அரசுப் பள்ளிகளோடு சில தனியார் பள்ளிகளும் இதற்காகப் பள்ளிகளை ஒப்படைத்தன. அதன்பின்னர், வகுப்பறைகளில் இருக்கும் சேர், டேபிள்களை அகற்றிக் கொடுக்குமாறு சொல்லப்பட்டது. அதற்கு அடுத்த நாள், டேபிள்களை ஒன்றாக வைத்து படுக்கை தயார் செய்துகொடுக்கும்படி பள்ளி நிர்வாகங்களை வலியுறுத்தினார்கள்.

`பள்ளியைக் கேட்டார்கள் கொடுத்துவிட்டோம். மேசைகளை ஒன்றாகப் போட்டு படுக்கைத் தயார்படுத்தித் தரச் சொல்வது எந்தவிதத்தில் சரியாகும்?’ என்று எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இப்படிக் குழப்பமான அறிவிப்புகளால் தொடர்ந்து 4 நாள்கள் பள்ளிகள் தரப்பில் பல்வேறு மனஉளைச்சலுக்கு ஆளானார்கள்.

பள்ளிக்கல்வி அதிகாரி

இதற்குப் பள்ளிகள் தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியது. `பள்ளியைக் கேட்டார்கள் கொடுத்துவிட்டோம். மேசைகளை ஒன்றாகப் போட்டு படுக்கை தயார்படுத்தித் தரச் சொல்வது எந்தவிதத்தில் சரியாகும்?’ என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். இப்படி மாற்றி மாற்றி குழப்பமான அறிவிப்புகளால் தொடர்ந்து 4 நாள்கள் பள்ளிகள் தரப்பில் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

இந்தநிலையில், திடீரென பொதுத்தேர்வு மையங்களாக எந்தெந்தப் பள்ளிகள் செயல்படுகின்றன என்ற தரவுகளை எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். மேலும், அப்படி தேர்வு மையங்களாக இருக்கும் பள்ளிகள் எதுவும் தனிமைப்படுத்துதல் பணிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறதா? தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் அப்படியான பள்ளிகள் ஏதும் இருக்கின்றனவா என்பன போன்ற விவரங்களையும் கேட்டார்கள்.

சென்னையில் உள்ள ஐந்து கல்வி மாவட்டங்களில் 265 தேர்வு மையங்கள் இருக்கின்றன. அவற்றில் சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கின்றன. இந்தச்சூழலில் நேற்று திடீரென, `மற்ற எதுவும் தேவையில்லை. தேர்வு மையங்களாகச் செயல்படும் பள்ளிகளுக்குச் சென்று வரும் வகையில் இருந்தால் மட்டும் போதும். அவற்றுக்கு அருகில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தாலும் பரவாயில்லை' என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இப்படி தினம்தினம் புதுப்புது அறிவுறுத்தல்களை வழங்கிவருவது குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.

இதுதொடர்பாக, தினசரி 100 முதல் 120 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் பேச வேண்டி இருக்கிறது. இப்படி தினமும் ஓர் அறிவிப்பை வெளியிடுவதால் அவர்களும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்துக்கு மிகக் குறைந்த அளவிலேயே தினசரி அதிகாரிகள் பணிக்கு வருகிறார்கள். மற்ற அனைவரும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுகிறார்கள். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில், `இந்தத் தகவலை வாங்கிக் கொடுங்கள். அந்தத் தகவலை வாங்கிக் கொடுங்கள்' எனச் சிரமப்படுத்துகிறார்கள்.

பொதுத் தேர்வுகளை ஜூலைக்குப் பிறகு நடத்தவே மத்திய அரசின்கீழ் இயங்கும் சிபிஎஸ்இ திட்டமிட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் ஜூன் மாதத்திலேயே பொதுத்தேர்வை நடத்த வேண்டிய அவசரம் என்ன? உதாரணமாக சென்னை அசோக் நகர், அரும்பாக்கம் பகுதிகளில் உள்ள பள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம். ஏறக்குறைய 3,500-லிருந்து 4,000 மாணவர்கள் வரை பயிலும் மிகப்பெரிய பள்ளிகள் அவை.

அந்தப் பள்ளிக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் பல தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பலவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் பட்டியலில் வருகின்றன. அப்படி இருக்கும்போது தேர்வை நடத்தினால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பள்ளிகளுக்கு வந்து மாணவர்கள் தேர்வெழுத வேண்டிய சூழல் ஏற்படும். இதனால், மற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் ஆசிரியர்களுக்கும் தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படும். இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிந்திக்காமல் செயல்பட்டதால்தான், 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு 35,000 மாணவர்கள் எழுத வர முடியாமல் போனது.

இதுதவிர, விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 27-ல் தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். விடைத்தாள் திருத்தும் பணி உண்மையிலேயே மிகவும் ரிஸ்க்கான வேலை. இந்தச் சூழலில் ஆசிரியர்கள் பலரும் போன் செய்து, `எங்களுக்கு உடல்ரீதியாக பிரச்னைகள் இருக்கின்றன. தயவுசெய்து எங்களை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்திவிடாதீர்கள்' என்று கெஞ்சுகின்றனர்.

சென்னையில் மட்டும் விடைத்தாள் திருத்தும் பணியில் 45 முதல் 55 வயது வரை உள்ள ஆசிரியர்களே அதிகம் பேர் ஈடுபடுகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம் ஒன்று. அப்படி இருக்கையில் அவர்களை எப்படி இந்தப் பணியில் ஈடுபடுத்துவது? எப்படியாவது தேர்வை நடத்தி முடித்துவிட வேண்டு என்று அமைச்சரும் அதிகாரிகளும் நினைக்கிறார்கள். மாணவர்கள், ஆசிரியர்களின் நலனைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவசரம் காட்டுவது அவ்வளவு நல்லதல்ல’’ என்றனர் வேதனையுடன்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனிடம் கேட்டோம். ``தேர்வுத் துறைக்கென இயக்குநர் தனியாக இருக்கிறார். இதைப்பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை’’ என்றவரிடம், `தேர்வு அட்டவணையை அமைச்சர் அறிவித்துவிட்டாரே?’ என்றோம். அதற்கு, ``அதைப்பற்றி நீங்கள் அமைச்சரிடமே கேளுங்கள். அனைவருக்கும் போதிய விளக்கம் அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது’’ என்றதோடு முடித்துக்கொண்டார்.

இதையடுத்து, அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்பு கொண்டோம். அவர் தரப்பில் நம்மிடம் பேசிய அவரின் உதவியாளர் கதிர் முருகன், `` அமைச்சர் ஊரில் இருக்கிறார். இதுதொடர்பாக அமைச்சர் பேசுவார். அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்" என்றதோடு தொடர்பைத் துண்டித்தார்.

`பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிடுவதற்கு யார் காரணம்?' என்ற கேள்விக்கு மட்டும் பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.