. -->

Now Online

FLASH NEWS


Thursday 19 November 2020

வரலாறு அறிவோம்..... நவம்பர் -19 இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி பிறந்த தினம்




சுதந்திர இந்தியாவின் 4 வது பிரதமர். எந்த ஒரு முடிவையும் தெளிவாகவும், துணிவாகவும் எடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த வீரப்பெண்மணி. உலக நாடுகளே கண்டு வியந்த சிறந்த பெண் ஆளுமை தன்னம்பிக்கை உள்ள பெண்களுக்கெல்லாம் ரோல் மாடலாக திகழ்ந்த இந்திராகாந்தி அம்மையார் அவர்களின் பிறந்த தினம் இன்று...

இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கும், கமலா அம்மாள் அவர்களுக்கும் ஒரே மகளாக (இந்திரா பிரியதர்ஷினி) 1917 ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் நாள் பிரயாக்ராஜ் என்ற இடத்தில் பிறந்தார்.

தம் பள்ளி படிப்பு முடித்து.விஸ்வபாரதி பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு ஆகியவற்றில் கல்லூரி படிப்பை முடித்து. இளம் வயதிலேயே இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிறை சென்றவர்.

விடுதலை போராட்டத்தில் சிறையில் இருந்த ஜவஹர்லால் நேரு, சிறுமி இந்திராவுக்கு இந்தியாவின் பன்முகத் தன்மையையும், உலக வரலாற்றையும் கடிதங்கள் மூலமாக போதித்தார். அவை இந்திராவுக்கு கடிதங்கள் என்ற புத்தகமாக வெளிவந்தது.

இதன்மூலம் இந்திராவை இளம் வயதிலேயே அறிவாற்றல் மிக்கவராக விளங்குவதற்கு அடித்தளம் அமைத்தவர் நேரு.

இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்த 17 ஆண்டுகாலம் அவருக்கு உதவியாக செயல்பட்டவர் இந்திரா காந்தி. 

அவர் வெளிநாடு செல்கிறபோதெல்லாம் உடன் சென்றவர். இதன்மூலம் உலகத் தலைவர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.

 ஒருமுறை அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார்.

ஜவஹர்லால் நேரு மறைவிற்கு பிறகு அனைவரது விருப்பப்படி இந்தியாவின் பிரதமராக பெருந்தலைவர் காமராஜரின் பரிந்துரையின் பேரில் லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
 ஆனால், அவர் குறுகிய காலத்தில் மரணம் அடைந்தார். 

அதைத் தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக எவரை தேர்வு செய்வது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்தது. 

அப்பொழுது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், இந்தியாவை வழிநடத்தக்கூடிய ஆற்றலும், திறமையும் இந்திரா காந்திக்கு இருப்பதை உணர்ந்தார்.  அவரை பிரதமராக்க பலரது ஆதரவுடன் அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றது.

 இதையொட்டி இந்தியாவின் நான்காவது பிரதமராக இந்திரா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

 தொடர்ந்து 11 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமர் பதவியை அலங்கரித்தார்.ஒரு பிரதம மந்திரியாக
அவருக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் வலுப்படுத்திக் கொண்டார். அத்தகைய ஆளுமையின் மூலமாக சிறந்த அரசியல்  திட்டமிடலாளராகவும் , சிந்தனையாளராகவும் , ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட இந்திய சமுதாயத்தில் ஒரு பெண்ணின் எதிர்பார்க்கப்படும் தன்மைக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிக உயர்ந்த பதவியில் நாட்டை வழிநடத்திச் சென்றார்.
தம் ஆட்சிக்காலத்தில் 1971ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பிணக்கில் இந்தியா வெற்றி பெறமுழு காரணமாக இருந்தார்.பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் பிரிவதற்கு அனைத்து உதவிகளையும் செய்தார். நாட்டில் ஏற்பட்ட பெரும் பிரச்சினைகளையும், அண்டை நாட்டு உறவுகளிலும் வெற்றி பெற்றார். செலாவணி நெருக்கடியை சுகமாக கையாண்டார்.இந்திய வங்கிகளை அரசுடைமை ஆக்கியது, பல்வேறு நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தியது, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை தண்ணீரில் பாதைக்கு அழைத்துச் சென்றது , உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை புரிந்த இரும்பு பெண்மணி இந்திரா காந்தி அவர்கள் அக்டோபர் 31, 1984 ஆம் ஆண்டு தம் பாதுகாவலரால்  படுகொலை செய்யப்பட்டார்.
உலக பெண்ணியவாதிகளுக்கும், பெண்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகவும்தனி ஆளுமையில் சிறந்தவராகவும், திகழ்ந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் பிறந்த தினம் இன்று, அவரது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவோம், அவரது புகழை பரப்புவோம் அவரை வணங்குவோம்...


*முனைவர் ராஜா ஆ
*பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கம்