. -->

Now Online

FLASH NEWS


Tuesday 1 December 2020

வரலாறு அறிவோம் - டிசம்பர்-1 உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்...




உலகை அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முதன்மையானதும், விழிப்புணர்வு இன்மையாலும் பாதுகாப்பு உணர்வு இன்மையாலும், அறியாமையினாலும் ஏற்படக்கூடிய எய்ட்ஸ் நோயின் கெடு விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் இன்று .


AIDS *அக்கோயர்டு இம்யூநோ டெபிஷியேன்ஸி சின்ரோம்* எனப்படும் எய்ட்ஸ் பெரும்பாலும் தவறான பாலியல் தொடர்பு மற்றும் சோதிக்கப்படாத ரத்தப் பரிமாற்றம் வழியாக பரவக்கூடிய ஒரு கொடிய நோயாகும்.1981ஆம் ஆண்டு உலகின் பல பகுதிகளில் இந்நோய் பற்றி அறியப்பட்டது.
2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 6 கோடியே 50 லட்சம் மக்கள் உலகமெங்கும் இக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு வகை வைரசால் ஏற்படக்கூடிய நோய்யென அமெரிக்க ஐக்கிய நாட்டின்தேசிய நலன் ஆய்வு மையத்தைச் சார்ந்த ராபர்ட் கேலோ மற்றும் பாரிசை சார்ந்த லுக் மாண்டகினியர் ஆகியோர் 1984 இல் எச். ஐ. வி எனப்படும் வைரஸை கண்டுபிடித்தனர். இந்த வைரஸ் ஆன்டிபாடிகளை கொண்ட ரத்த வெள்ளை அணுக்களை அழித்து ரத்தத்தில் அவற்றின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து உடலின் நோய் தடுப்பாற்றலை சீரழித்து விடுகின்றது.
எனவே உடலில் ஏற்படக்கூடிய எந்த நோயையும் தடுக்க முடியாமல் போவதால் நோய்களின் தாக்கம் அதிகமாக உயிரிழப்பு ஏற்படுகிறது.
எச்.ஐ.வி தாக்கத்தைக் கண்டறிய எலைசா ஆய்வும் அதை உறுதிப்படுத்த வெஸ்டர்ன் பிளாட் சோதனையும் பயன்படுகின்றன.எய்ட்ஸ் நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறுதியில் மரணமடைகின்றனர்.

*எய்ட்ஸ் நோய் பரவும் காரணங்கள் :*

1.எச்.ஐ.வி ஆய்வு செய்யப்பட்ட ரத்தத்தையே பயனாளிகளுக்கு செலுத்த வேண்டும்.

2.ஒரே ஊசியை பயன்படுத்தி போதைப் பொருட்களை உடலில் ஏற்றும் முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

3.மருந்து ஊசியை ஒரு நபருக்கு ஒன்று என பயன்படுத்த வேண்டும்.

4.சிகை அலங்கார நிலையங்களிலும் முடிதிருத்தும் நிலையங்களிலும் கத்தி, பிளேடு, ஊசி போன்றவற்றை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

5.ஒரே ஊசியை பயன்படுத்தி பச்சை குத்துதலை தவிர்க்க வேண்டும்.

6.பாதுகாப்பான இணைவு முறைகளை பின்பற்ற வேண்டும்.

7.அரசாங்கத்தின் எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வுகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும்.
போன்ற நடவடிக்கைகளை செய்வதன் மூலம் எய்ட்ஸ் வராமல் முற்றிலும் தவிர்க்கலாம்.


உலக சுகாதார நிறுவனம் உலக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, எய்ட்ஸ் நோயின் கொடுமையை உலக மக்களுக்கு உணர்த்த டிசம்பர் 1ஆம் தேதியை உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினமாக அனுசரித்து வருகிறது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை பெறுவோம் எய்ட்ஸ் இல்லா உலகத்தை படைப்போம்...



*முனைவர் ராஜா ஆ
*பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கம்