. -->

Now Online

FLASH NEWS


Thursday 21 January 2021

இரத்து செய்யக் கூடியதே புதிய ஓய்வூதியத் திட்டம்!




1990 களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கல்  கொள்கைகளின் விளைவாகப் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் கேடு விளைவிக்கும் வகையிலான சட்டங்களையே தற்போது ஆளுகின்ற மத்திய மாநில அரசுகளும் இதற்கு முன்னர் ஆட்சி செய்த மத்திய மாநில அரசுகளும் கொண்டுவந்தன.

அவற்றின் விளைவாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தினை கடந்த 2003-ஆம் ஆண்டு பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு 22. 12.2003-ல் அவசரச் சட்டமாக முன்மொழிந்தது.

அதனைத்தொடர்ந்து, வேறு எந்த மாநிலங்களிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை  நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே 1.4.2003 முதல் அஇஅதிமுக தலைமையிலான தமிழக அரசு ஊழியர்களுக்கு முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தியது. மத்திய அரசு 01.01.2004 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

திட்டத்தை நடைமுறைப்படுத்திய போதிலும் 10 ஆண்டுகளாக எவ்விதமான வழிகாட்டுதல்களுமின்றி ஜனநாயக மரபுகளுக்கு மாறாக அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டு ஊழியர்களிடம் பங்களிப்புத் தொகையை பிடித்தம் செய்தன.  புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கான சட்டமானது 04.09.2013-ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு 19.9.2013 ஆம் தேதியில் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 66 ஆயிரம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்களிப்பு மற்றும் அதற்கான வட்டி என மொத்தமாக சுமார் 36,000 கோடி தமிழக அரசிடம் உள்ளது. 

இந்த புதிய  ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையிலேயே தமிழகத்தில் நம்மைப் போன்ற முற்போக்கு  ஆசிரியர் சங்கங்களும் அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து கடுமையாக எதிர்த்ததுடன், இத்திட்டத்தினை எதிர்த்து தொடர் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பலகட்டப் போராட்டங்களை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக 2016 பிப்ரவரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து நடத்திய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து 19.2.2016 தேதியில் அன்றைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதாஅவர்கள் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உள்ள சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், புதிய ஓய்வூதியத்தில் மரணமடைந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒருமாதத்தில் பணப்பலன்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பினையும் வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து 23.2.2016 அன்று தமிழக அரசு வல்லுநர் குழு அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இறந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்களை வழங்க அரசாணையும் வெளியிடப்பட்டது. 

இந்த அரசாணையின் அடிப்படையில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 484 கோடி ரூபாய் தொகையினை, 'மீண்டும் எவ்விதமான ஓய்வூதியப் பலன்களையும் கோரமாட்டோம்' என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் இத்திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையானது அரசின் பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளிக்கப்பட்டுள்ளது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உள்ள சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான வல்லுனர் குழுவானது 23.2.2016 தேதியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருமதி.சாந்தா ஷீலா நாயர்  தலைமையில் அமைக்கப்பட்டது. அதனுடைய ஆய்வுக் காலமானது நான்கு மாதங்களாக வரையறை செய்யப்பட்டது. இந்த நான்கு மாத காலத்தில் குழுவானது எந்த ஒரு அரசு ஊழியர் / ஆசிரியர் இயக்கத்தையும் சந்திக்கவில்லை. மேலும், நான்கு மாத காலத்தில் ஒரு முறை மட்டுமே கூட்டம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து நான்கு முறை காலநீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் வல்லுநர் குழுவின் தலைவர் சாந்தா ஷீலா நாயர் 2017-ல் தனது தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

இதனைதொடர்ந்து திரு.டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் வல்லுனர் குழு செயல்பட்டு கடந்த 27 11.2018-ஆம் தேதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தனது ஆய்வு அறிக்கையை வழங்கியது.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் விளைவாக 2019 ஜனவரி மாதத்தில் மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வல்லுநர் குழு அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உரைகளில் வைத்து உயர்நீதிமன்ற பதிவாளரிடம் வழங்கப்பட்டது.

வல்லுநர் குழு அறிக்கையானது அரசிடம் அளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் தொடர் மௌனத்தைத் தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது.

2011 & 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல்களின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதாக அ.இ.அ.தி.மு.க அரசு வாக்குறுதி வழங்கியதையும் நாம் மறந்துவிட முடியாது.

இப்புதிய ஓய்வூதியத் திட்டமானது மாநில அரசுகளின் விருப்பத்தின் அடிப்படையிலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாயத்தின் அடிப்படையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் தான் தொழிலாளர் நலனை நோக்காது வலதுசாரித் தத்துவத்தின் கீழ் செயல்படும் கட்சிகள் மாநில ஆட்சிப் பொறுப்புகளை ஏற்ற பின்னர் மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் 2010-ஆம் ஆண்டிலிருந்தும், கேரளாவில் 2013-ஆம் ஆண்டிலிருந்தும் திரிபுராவில் 2018-ஆம் ஆண்டிலிருந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டின் நிதிச் செலவினம் கூடுகிறது என்ற அடிப்படை வாதத்தை வைத்தே பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் உண்மையில் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் தான் நிதிச்சுமையே அதிகரித்துள்ளது. பழைய ஓய்வூதியத்திட்டத்தில் ஊழியரின் ஓய்விற்குப் பின்னரே அரசு ஓய்வூதியப் பலன்களை அளிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், தற்போதைய புதிய திட்டத்தால் அரசு ஓய்வூதியப் பலன்கள் ஏதும் வழங்குவதில்லை என்ற போதிலும் ஒவ்வொரு மாதமும் கட்டாயமாக அரசு ஊழியர்களுக்கான அரசின் பங்களிப்புத் தொகையைக் கணக்கில் செலுத்தியாக வேண்டிய சூழல் ஏற்பட்டு மாதாந்திர நிதி  நெருக்கடி அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது வரை தமிழக அரசு ஓய்வூதிய ஒழுங்காற்றுமுறை ஆணையத்தில் கையெழுத்திடாததால் தான் ஊழியரின் பங்களிப்பையும் அரசின் பங்களிப்பையும் வட்டியுடன் ஓய்வின் போது வழங்கி வருகிறது. இல்லையேல், இத்தொகையையும் அரசு தனது ஊழியருக்கு வழங்க இயலாது. பங்குச் சந்தையில் தான் முதலீடு செய்தாக வேண்டும்.

பங்குச் சந்தை என்பது அபாயமிக்க சூதாட்டம். நமது நாட்டின் சூழல் மட்டுமன்றி உலக நாடுகளில் ஏற்படும் மாற்றங்களும் நமது நாட்டின் பங்குச் சந்தையைப் பாதித்து பேரிழப்பை ஏற்படுத்தும் என்பது நாம் அன்றாடம் காணும் நிகழ்வே. ஆக, ஊழியருக்கும் பயனின்றி அரசிற்கும் பயனின்றி நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கும் பொருளாதாரப் பேரிடர் திட்டமே இந்த புதிய ஓய்வூதியத் திட்டம்.

கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசானது இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் தொடரைச் செய்வதன் மூலமாக சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பு தொகையை ஊழியருக்கு வழங்கவேண்டிய தேவையே இருக்காது. மேலும், மாதாந்திர தொடர் செலவினத்தையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.

எனவே, மாநில சுய விருப்பின் பேரில் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடர்வதே ஊழியர்களுக்கும் அரசிற்கும் நலம் பயக்கக்கூடிய நடவடிக்கையாகும்.

பி.பிரெடெரிக் எங்கெல்ஸ். 
 *மாநில ஒருங்கிணைப்பாளர்.
*CPS ஒழிப்பு இயக்கம்.