. -->

Now Online

FLASH NEWS


Friday 16 April 2021

திருச்சியில் பிளஸ் 2 முதல் நாள் செய்முறைத் தேர்வில் 317 பேர் பங்கேற்கவில்லை


தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்டச் செய்முறைத் தேர்வு இன்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் முதல் நாள் தேர்வில் மாணவ- மாணவிகள் 317 பேர் பங்கேற்கவில்லை.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்பைத் தவிர பிற வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி நிறைவடையும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வரவுள்ளதையொட்டி, மே 3-ம் தேதி தேர்வு மட்டும் மே 30-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிற பாடத் தேர்வுகள் அட்டவணைப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்குப் பொதுப் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஏப்.16 முதல் ஏப்.23-ம் தேதிக்குள், கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையொட்டி, பிளஸ் 2 வகுப்பில் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள 28 பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்.16 முதல் ஏப்.20 வரை மற்றும் ஏப்.20 முதல் ஏப்.23 வரை என 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளன. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கின. அந்தந்தப் பள்ளிகளில் உள்ள பாடப் பிரிவுகளுக்கேற்ப தேர்வுகள் நடத்தப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக 124 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், 90 மையங்களில் இன்று செய்முறைத் தேர்வில் பங்கேற்றனர். மொத்த மாணவ- மாணவிகள் 11,373 பேரில் 11,056 பேர் மட்டுமே செய்முறைத் தேர்வில் பங்கேற்றனர்.

கல்வி மாவட்டம் வாரியாகத் திருச்சியில் 4,254 பேரில் 4,137 பேரும், லால்குடியில் 2,823 பேரில் 2,784 பேரும், மணப்பாறையில் 2,546 பேரில் 2,433 பேரும், முசிறியில் 1,750 பேரில் 1,702 பேரும் செய்முறைத் தேர்வில் பங்கேற்றனர். அதேவேளையில், 317 பேர் செய்முறைத் தேர்வில் பங்கேற்கவில்லை.