. -->

Now Online

FLASH NEWS


Wednesday 7 April 2021

முடிந்தது தேர்தல் திருவிழா - கிராத்தூரான்




பளிச்சென்ற முகத்தோடு பளபளப்பாய் உடையுடுத்தி
தேர்தல் அலுவலர்கள் விறைப்பாக அமர்ந்திருக்க
ஓட்டுப்போட வருகின்ற பொதுமக்கள் நினைக்கிறார்கள்
"வேலையென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்."

முந்திய நாள் காலையிலே முண்டியடித்து வந்துவிட்டு
வாக்கு எந்திரம் எப்போது வருமென்று நாள் முழுதும்
வெளியில் கூட செல்வதற்கு முடியாமல் காத்திருக்கும்
அவலங்கள் வெளியிலே யாருக்கும் தெரிவதில்லை.

இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கும் வசதியின்றி
சூடாக ஒரு டம்ளர் தேனீர்க்கும் வழியின்றி
குடிப்பதற்குத் தண்ணீராவது கிடைக்குமாவென அலைகின்ற
மாதர்களின் அவஸ்தையெந்த மாந்தருக்கும் தெரிவதில்லை.

இரவெல்லாம் விழித்திருந்து வேலைகளை முடித்துவிட்டு
பாதுகாப்பை நினைத்தவாறே உறங்காமல் படுத்துவிட்டு
காலைக் கடன்களைக் கவலையோடு தவிர்த்துவிட்டு
கடமையைச் செய்கின்றார் என்பதும் தெரிவதில்லை.

ஈரத்துணியால் வியர்வையைத் துடைத்துவிட்டு
நாறாமல் இருப்பதற்குத் திரவியங்கள் பூசிவிட்டு
நேரம் கடந்து வருகின்ற முகவர்களை எதிர்பார்த்து
பரபரப்பாய்க் காத்திருக்கும் பதற்றமும் தெரிவதில்லை.

கைக்குழந்தையைக் கவனிக்க எங்காவது விட்டுவிட்டு
நோய் தரும் வலிகளைப் பல்லைக் கடித்து மறைத்து விட்டு
சாய்ந்து உட்கார ஒரு நாற்காலி கூட இல்லாமல்
பனிரண்டு மணிநேரம் அமர்ந்திருப்பது தெரிவதில்லை.

வெளியிலே செல்வதற்கு உரிமையும் இல்லாமல்
எவராவது *உணவு கொஞ்சம் பிச்சையிட மாட்டார்களா*
தேனீராவது குடிப்பதற்குக் கொண்டுவர மாட்டார்களா
என்றவாறே அமர்ந்திருக்கும் அவலமும்
தெரிவதில்லை.

எப்போது வருவார்கள் இயந்திரத்தை எடுப்பதற்கு
நள்ளிரவு கடந்தபின்னே வீடு செல்ல முடியுமா
மீண்டுமொரு இரவிந்தக் கவலைகள் தொடருமா
எத்தனை பிரச்சினைகள், எவ்வளவு பாதிப்புகள்!

அத்தனையும் எதிர்கொண்டும் எதையும் வெளிப்படுத்தாது
மாற்றுடா சட்டையை, போவோம் அடுத்த பஞ்சாயத்துக்கு
என்ற கெத்தோடு வெளிவந்து வீட்டில் வந்து படுத்துவிடும்
அரசு ஊழிய ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கங்கள்.

*கிராத்தூரான்