. -->

Now Online

FLASH NEWS


Monday 17 May 2021

புதிய கல்விக் கொள்கை ஆலோசனை: புறக்கணித்தது தமிழக அரசு

மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் திட்டமிட்டபடி மாநில செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், தமிழக அரசு புறக்கணித்துள்ளது.


புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு மாறாக மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு எந்தவித பதிலும் வழங்கவில்லை. 

மேலும், புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைக்க முடியாது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மாநில செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், தமிழக அரசு அதனைப் புறக்கணித்துள்ளது.

ஏற்கெனவே புதிய கல்விக் கொள்கையை எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் அமல்படுத்த முடியாது என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை மத்திய அரசு ஏற்காத நிலையில், தற்போது மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புறக்கணிப்பு ஏன் என்பது குறித்து தமிழக அரசு காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.