. -->

Now Online

FLASH NEWS


Monday 13 September 2021

ஆரணி அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு தங்க நாணயம் பரிசு

ஆரணி அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வருடந்தோறும் ஆசிரியர் தினத்தன்று ஒவ்வொரு கல்வியாண்டிலும் சிறப்பிடம் பிடித்த 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆரணி பகுதியில் அமைந்துள்ள மகாவீர் ஜெயின் சார்பில் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து ஐந்து வருடங்களாக நடைபெற்று வருகிறது.


2019 ஆம் ஆண்டு கரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் அந்த ஆண்டு பரிசுப்பொருள் வழங்கவில்லை. 2020- 21 கல்வி ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி திங்கட்கிழமை காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் கலந்துகொண்டு கடந்த ஆண்டும், இந்த கல்வி ஆண்டிலும் 12 ஆம் வகுப்பில் அரசுப்பள்ளியில் சிறப்பிடம் பிடித்த மாணவிகள் 12 பேருக்கு தலா 2 கிராம் வீதம் தங்க நாணயம் மற்றும் நினைவுப்பரிசு மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்.

மாணவிகள் பள்ளியில் மட்டுமல்லாது வெளியில் எங்கு சென்றாலும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், கைகளை கட்டாயம் அடிக்கடி கழுவ வேண்டும். நாம் மட்டும் பின்பற்றாமல் நமது நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் இந்த முறையை பின்பற்றவைக்க வேண்டும் என்றும் கூறினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் காவேரி அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் சீனிவாசன் பரிசு பெற்ற மாணவிகளுக்கும் பரிசு வழங்கிய தொண்டு நிறுவனங்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் பிரேம்குமார், உதவி தலைமை ஆசிரியர் முருகவேலு, பட்டதாரி ஆசிரியர் சரவணன் உட்பட இருபால் ஆசிரியப் பெருமக்களும் மாணவிகள் பெற்றோர்களும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.