. -->

Now Online

FLASH NEWS


Saturday 9 October 2021

பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்




பால் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு என்பதால், அது அன்றாட உணவில் ஒரு அங்கமாக உள்ளது. பாலில் புரதம், கால்சியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின் டி உள்ளிட்ட பிற சத்துக்கள் நிறைந்துள்ளன.


பாலை, உணவில் சேர்ப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைக்கின்றன. உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான பால் நம் எலும்புகளை பலப்படுத்துகிறது.

நமது உடல் ஆரோக்கியத்திற்கு பால் அவசியம் என்றாலும், பாலுடன் சில உணவுகளை சேர்த்துக்கொள்ளும் போது நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தும். இதனால், வயிற்றுப்போக்கு, வாந்தி, அலர்ஜி மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதையடுத்து, பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து பார்க்கலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

காலையில் எழுந்த உடன் பால் குடித்த அரை மணி நேரத்திற்குள், வேறு பானங்கள் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அது, உடலுக்கு பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தி விடும்.

பாலையும், வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் அது வயிற்றுக்கு எரிச்சலை தரும்.

பாலில் உள்ள அதிக குளிர்ச்சி தன்மையும், வாழைப்பழத்தில் உள்ள அதிக வெப்ப தன்மையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து செரிமானம் ஆகும்போது நச்சு தன்மையாகி விடும்.

எனவே இனி இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஸ்ட்ராபெர்ரியில் பல நல்ல சத்துக்கள் இருந்தாலும், அதில் உள்ள அமில தன்மை அதிக வெப்பத்தை கொடுக்கும். ஆனால், பால் குளிர்ச்சியை தரும். இவை இரண்டும் சேரும்போது ஜீரண பிரச்சனைகளை தருவதோடு அலர்ஜி, சளி, இருமல் ஆகியவை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எலுமிச்சை ஜுஸ் குடித்துவிட்டு, சிலர் உடனே பால் குடிப்பார்கள். எலுமிச்சையில் உள்ள அதிக சிட்ரிக் அமில தன்மை பாலுடன் சேர்ந்து வேதி மாற்றங்கள் அடையும். மேலும் அவ்வாறு குடிக்கும் போது, குடலில் அலர்ஜி போன்றவை ஏற்படும். அத்துடன் ஜீரண மண்டலம் பாதிப்படையும்.

மீனில் இருக்கும் அதிக ஊட்டச்சத்துக்கள், உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தரும். ஆனால், மீன் சாப்பிட்ட பிறகு அல்லது சாப்பிடுவதற்கு முன்பு, பாலை எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில் இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். மேலும், இரத்த ஓட்ட பிரச்சனை, இதயக்கோளாறு போன்றவற்றை ஏற்படுத்தி விடும்.

இறைச்சியில் அதிக புரோட்டீன் இருப்பதால் அது செரிமானம் ஆக பல மணி நேரம் எடுத்து கொள்ளும். இந்நிலையில், பாலை, இறைச்சியுடன் சேர்த்து சாப்பிட்டால் செரிமான மண்டலத்தில் அழுத்தத்தை கொடுத்து உடல் உபாதைகளை தரும்.

தயிர், மோர் அல்லது புளிப்பு உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இது வயிற்று கோளாறு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

பால் மற்றும் புளிப்பு உணவுகளுக்கு இடையில் குறைந்தது அரை மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.

விருந்துக்கு செல்லும் போது, தயிர்பச்சடி மற்றும் பாயசம் என இரண்டுமே விருந்தில் இருந்தால், அவற்றில் ஒன்றை மட்டுமே சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.


​​​​​​​​