. -->

Now Online

FLASH NEWS


Wednesday 13 October 2021

இடி மின்னல் ஏற்பட காரணம் என்ன? அதில் இவ்வளவு ஆபத்து உள்ளதா? நாம் எதையெல்லாம் செய்யக்கூடாது?




வேறு எதற்குமே பயப்படாதவர்கள் கூட இடி இடித்தால் நடுங்குவார்கள்.. இன்னும் சிலரோ இடி சத்தம் கேட்டாலே, கண்ணை மூடிக் கொண்டு, காதை பொத்திக் கொண்டு அர்ஜூனா அர்ஜூனா என்று கூறுவார்கள்..


இடி இடிக்கும் சத்தமானது அந்தளவுக்கு நம்மை மிரள வைக்கும்.. ஆனால் இடி இடிக்கும் போது நாம் செய்யும் சில செயல்களால் நம் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? உண்மை தான்.. இடி இடிக்கும் போது நாம் என்னவெல்லாம் செய்யலாம்..? எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை விரிவாக பார்க்கலாம்..

 
காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால், வானத்தில் மின்சாரம் உண்டாகிறது.. இதன் காரணமாகவே இடி மின்னல் ஏற்படுகிறது.. ஆனால் இடியும், மின்னலும் ஒரே நேரத்தில் ஏற்படும் என்பது தான் கூடுதல் சுவாரஸ்யம்.. ஆனால் ஒலியை (Sound) விட ஒளி (Light) வேகமாக பயணிக்கும் என்பதால் மின்னல் தான் நமது கண்ணுக்கு முதலில் தெரிகிறது.. மின்னல் வந்த சில நொடிகள் கழித்து தான் இடி இடிக்கும் சத்தம் நமக்கு கேட்கும்..

ஒரு மின்னலில் 1.5 கோடி வோல்ட் மின்சாரம் இருக்குமாம்.. அந்த மின்னல் பூமியை தாக்கும் போது, 30,000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் ஏற்படுமாம்.. எனவே தான் உலகம் முழுவதும் உள்ள காடுகளில் காட்டுத்தீ ஏற்படுவதற்கு மின்னல்கள் காரணமாகின்றன.. மின்னல் எந்தளவுக்கு பிரகாசமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு இடியும் சத்தமும் பலமாக இருக்கும்.. இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் இடி, மின்னல் தாக்கி 1619 பேர் உயிரிழந்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.. இது வழக்கத்தை விட 34% அதிகம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்..

காலநிலை மாற்றம் காரணமாக இந்த என்ணிக்கை அதிகமாகி இருப்பதாகவும், இது வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.. இடி, மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களில் வெளியில் நிற்பவர்கள் தான் அதிகம் என்று கூறப்படுகிறது.. 2006 முதல் 2016 வரை 10 ஆண்டுகளில் நடைபெற்ற ஆய்வின் அடிப்படையில், வெளியிடங்களில் நின்ற காரணத்தினால் தான் 50%-க்கும் அதிகமானோர் இடி, மின்னல் தாக்கி உயிரிழக்கின்றனர்.. இந்தியாவில் இடி, மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களில் பீகார் முதலிடத்தில் உள்ளது.. உத்தரப்பிரதேசம் 2-வது இடத்திலும், 3-வது இடத்தில் மத்தியப் பிரதேசமும், 4-வது இடத்தில் தமிழ்நாடும் உள்ளது..

 
சரி.. இடி, மின்னலின் போது எப்படி நம்மை தற்காத்து கொள்வது..? இடி, மின்னலின் போது வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.. ஒருவேளை வெளி இடங்களில் இருந்தாலும் வீட்டுக்கு செல்வது நல்லது.. இருசக்கர வாகனத்தில் சென்றால் ஏதேனும் ஒரு பாதுகாப்பான இடத்தில் நின்று கொள்வது நல்லது.. ஆனால் காரில் செல்வோருக்கு இடி, மின்னலால் பெரிய பாதிப்பு இல்லை.. காரில் இருக்கும் போது இடி, மின்னல் தாக்குவது இல்லை.. காரில் உள்ள Faraday cage என்ற மெட்டல் சீட் தான் இதற்கு காரணம்.. எனவே காருக்குள் இருக்கும் நபர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.. ஆனால் காரில் உள்ள எந்த பொருளையும் நீங்கள் தொடாமல் இருப்பது நல்லது..

புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களில் மழை பெய்யும் போது நுழையக்கூடாது.. அந்த கட்டிடங்கள் மின் கம்பிகள், சரியாக பூசப்படாத சிமெண்ட காரணமாக பாதிப்பு ஏற்படலாம்.. மேலும் மழை பெய்யும் போது மலை உச்சிகள், நீர் நிலைகளில் இருப்பது ஆபத்தானதாக கருதப்படுகிறது..

ஒருவேளை திறந்தவெளியில்‌ இருக்கும்படியான சூழல் ஏற்பட்டால், கால்கள்‌ இரண்டையும்‌ மடக்கி உட்கார்ந்து, கரங்களால்‌ கால்களை சுற்றி, கைகளால் காதுகளை மூடி, கண்களை மூடி, தலை கவிழ்ந்த நிலையில்‌ அமரவேண்டும்‌. இது இடி நம்மை தாக்கும்‌ பரப்பைக் குறைக்க உதவும்‌.

 
இதே போல் வீடுகளில் உள்ளவர்களும், இடி, மின்னலின் போது தண்ணீர் குழாய்களை திறக்காமல் இருப்பது நல்லது.. அந்த நேரத்தில் குளிப்பதும் ஆபத்து தான்.. இடி இடிக்கும் போது தண்ணீர் குழாயை திறந்தால் அதன் மூலம் மின்சாரம் பாய வாய்ப்புள்ளது.. இடி மின்னல் ஏற்படும் போது செல்போனை விட, லேண்ட் லைன் போனை பயன்படுத்துவது தான் அதிக ஆபத்தானது.. அதன் வயர்கள் வெளியில் இணைக்கப்பட்டிருப்பதால், தன் மூலம் மின்னல் தாக்க வாய்ப்புள்ளது.. அதற்காக இடி மின்னலின் போது செல்போனை வைத்திருப்பதால் பிரச்சனை இல்லை என்று நினைக்க வேண்டாம்.. இடி மின்னலின் இருந்து அதீத வெப்பம் காரணமாக செல்போன் உருகிவிடும்.. இதனால் ஏற்படும் பாதிப்பு அதிகம்..

வீட்டிற்கு வெளியே கட்டிப்பட்டிருக்கும் வளர்ப்பு நாய்கள், மரக்கூண்டுகளில் வளர்க்கும் பறவைகள் ஆகியவற்றை வீட்டுக்குள் வைத்துக் கொள்வது முக்கியமானது.. தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, கணினி உள்ளிட்ட மின்‌ சாதனப் பொருட்களுக்கான மின்‌ இணைப்பை துண்டித்துவிட வேண்டும்..

இது மின்னல்‌ தாக்கும்‌ போது ஏற்படும்‌ அதிகப்படியான மின் அழுத்தத்திலிருந்து மின்சார உபகரணங்களை பாதுகாக்க உதவும்.

கடைசி இடி சத்தம் கேட்டு 30 நிமிடங்களுக்குக் பிறகு தான் வெளியே வேண்டும்.. ஏனெனில், இடி மின்னல் முடிந்துவிட்டது என்று உடனடியாக வெளியேறுவோர் தான் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.. எனவே 30 நிமிடங்கள் கழித்து தான் வெளியே வர வேண்டும்.. இயற்கைக்கு முன்னால் மனிதர்கள் மட்டுமல்ல, அவர்கள் கண்டுபிடித்த தொழில்நுட்பமும் ஒரு பொருட்டே இல்லை என்பதை நிரூபிக்கும் மற்றொரு விஷயம் தான் இடி மின்னல்.. இடி மின்னலை நம்மால் எதுவும் செய்ய முடியாது.. ஆனால் அவற்றில் இருந்து நம்மை தற்காத்து கொள்வதை மட்டுமே நாம் செய்ய முடியும்..
​​​​