. -->

Now Online

FLASH NEWS


Thursday, 22 September 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.09.2022
திருக்குறள் :


குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : தீவினை அச்சம்

குறள் எண் : 201

குறள்: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு.

விளக்கம் : தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

பழமொழி :
Pluck not where you never planted. 

பிறர் உடைமைக்கு ஆசைப்படாதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.

 2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன்.

பொன்மொழி :

பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்ந்தே படிக்கிறார்கள்.

பொது அறிவு :

1.நீரில் கரையும் வாயு எது ?

 அம்மோனியா . 

 2.ஆக்ஸிஜனை கண்டுபிடித்தவர் யார்?

 ஜோசஃப் பிரிஸ்டிலி.

நீதிக்கதை

கடமையைச் செய், உயர்வை அடைவாய்

கடமைகளைச் செய்வதுதான், நாம் உயர்வு பெறுவதற்கு உரிய ஒரே வழியாகும். அவ்விதம் நமது கடமைகளைச் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் வலிமையைப் பெருக்கிக் கொண்டே சென்று, இறுதியில் நாம் உயர்ந்த நிலையை அடைந்துவிடலாம். இளம் துறவி ஒருவர் காட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தியானம், வழிபாடு, யோகப்பயிற்சி போன்றவற்றில் நீண்ட காலம் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்.

அப்போது அவர் தலைமீது சில உலர்ந்த சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும், கொக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம். கோபத்துடன் அவர், என்ன! எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்! என்று கூறியபடியே, அந்தப் பறவைகளைப் பார்த்தார். யோகி அல்லவா! அவரது கண்களிலிருந்து ஒரு நெருப்பு மின்னல்போல் மேலெழுந்து சென்று, அந்தப் பறவைகளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது! அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு, அவருக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி, உணவிற்காக அருகில் இருக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன்நின்று, அம்மா, பிச்சை இடுங்கள்! என்று கேட்டார். மகனே! கொஞ்சம் இரு என்று வீட்டின் உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது. இதைக் கேட்ட அந்தத் துறவி தனக்குள், பெண்ணே, என் சக்தியை நீ அறியவில்லை! என்னைக் காக்க வைக்கிறாயே! உனக்கு எவ்வளவு தைரியம்! என்று நினைத்தார். இப்படி அவர் நினைத்ததுமே உள்ளே இருந்து, மகனே, உன்னைப்பற்றி அவ்வளவு பெரிதாக நினைத்துக் கொள்ளாதே! இங்கே இருப்பது காக்கையும் அல்ல, கொக்கும் அல்ல! என்று குரல் வந்தது. துறவி திகைத்துவிட்டார். எப்படியானாலும் அவர் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது. கடைசியாக அந்தப் பெண் வெளியில் வந்தாள். 

துறவி அவள் கால்களில் வீழ்ந்து வணங்கி, அம்மா, நான் மனதில் நினைத்ததை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்? என்று வினவினார். அதற்கு அவள், மகனே, உன்னைப்போல் எனக்கு யோகமோ, தவமோ எதுவும் தெரியாது. அன்றாடம் என் கடமைகளைச் செய்து கொண்டிருக்கும் ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோய் வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தேன். அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான் என் கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனபூர்வமாகச் செய்துவருகிறேன். திருமணத்திற்கு முன்பு பெற்றோருக்கு என் கடமையைச் செய்தேன். இப்போது என் கணவருக்குச் செய்து வருகிறேன். என் கடமைகளை நான் செய்து வந்த காரணத்தால் என் ஞானக்கண் திறந்துவிட்டது. அதனால்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது, காட்டில் உனக்கு நடந்ததையும் தெரிந்து கொண்டேன். 

இதற்கு மேலும் நீ ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால், இந்த நகரத்திலுள்ள கடைத்தெருவுக்குச் செல். அங்கே ஒரு வியாதனை (இறைச்சி வியாபாரி) நீ சந்திப்பாய். அவன் உனக்குப் போதிப்பான் என்று கூறினாள். முதலில் அந்தத் துறவி, ஒரு வியாதனிடம் நான் போவதா? என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றுமுன்பு நடந்த நிகழ்ச்சியால் அவரது ஆணவம் சற்று விலகியிருந்தது. எனவே நகரத்திற்குச் சென்றார். கடைத்தெருவைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்றார். அங்கே கொழுத்த பருமனான ஒருவன் பெரிய ஒரு கத்தியால் இறைச்சியை வெட்டியபடியே, இறைச்சியை விலை பேசுவதும் விற்பதுமாக இருந்தான்.

அடக்கடவுளே! இந்த மனிதனிடமிருந்தா நான் உயர்ந்த கருத்துகளைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்! இவனைப் பார்த்தால் அசுரனின் அவதாரம் போல் தோன்றுகிறதே! என்று நினைத்து துறவி அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில் வியாதன் துறவியைக் கவனித்துவிட்டு, ஓ சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? இங்கு சிறிது நேரம் அமர்ந்திருங்கள், என் வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான்.

இங்கே என்ன நடக்கப் போகிறதோ? என்று நினைத்துக் கொண்டே துறவி அங்கு உட்கார்ந்திருந்தார். நீண்ட நேரம் கழிந்தது. வியாதனின் வேலை முடிந்தது. அவன் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு துறவியிடம் வந்து வாருங்கள், நாம் வீட்டிற்குப் போகலாம்! என்றான். வியாதன் வீட்டை அடைந்ததும் துறவி அமர்வதற்கு இருக்கை ஒன்றை அளித்து இங்கேயே இருங்கள், வந்துவிடுகிறேன்! என்று கூறிவிட்டு உள்ளே சென்றான். பின்னர், அவன் வயது முதிர்ந்த தன் தந்தையையும், தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி, அவர்கள் மனம் மகிழும்படி பலவகையான சேவைகளைச் செய்தான். பிறகு துறவியிடம் வந்தான்.

துறவி அவனிடம் ஆன்மாவைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வியாதன் அதற்குத் தந்த விளக்கம் வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கிறது. பின்னர் துறவி வியாதனைப் பார்த்து, நீங்கள் ஏன் வியாதனாக இருக்கிறீர்கள்? இது இழிவான தொழில் ஆயிற்றே! என்று வினவினார். அதைக் கேட்ட வியாதன் துறவியை நோக்கி, மகனே, கடமைகளில் எதுவும் இழிந்ததும் இல்லை, கேவலமானதும் இல்லை.

என்னுடைய பிறப்பு, கசாப்புத் தொழில் செய்யும் இந்தச் சூழ்நிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்குப் பற்று எதுவும் இல்லை. என் பெற்றோரை மகிழ்விப்பதற்கு உரிய சேவைகள் எல்லாவற்றையும் நான் செய்கிறேன். உங்கள் யோகம் எனக்குத் தெரியாது, நான் வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என் நிலைக்கு உரிய என் கடமைகளை நான் பற்றின்றி செய்தேன். அதனால் எனக்குக் கிடைத்தவற்றையே நீங்கள் என்னிடம் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்று கூறினான்.

இன்றைய செய்திகள்

23.09.22

*தமிழகத்தில் 1267 பேருக்கு எச்1என்1 ஃப்ளூ காய்ச்சல் உறுதி: 6000 சோதனைக் கருவிகளை வாங்க சுகாதாரத்துறை திட்டம்.

* தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நேற்று தொடங்கியது.

* மத்திய அரசின் 'அரசு மின் சந்தை' தளத்தில் அதிக அளவில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், புதிய தொழில்முனைவோர் ஆகியோரை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

* பின் இருக்கை சீட் பெல்ட்டுக்கும் அலாரம் கட்டாயம் வேண்டும் - மத்திய அரசு வரைவு விதிகள் வெளியீடு.

* பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கியதில் பாரபட்சம் காட்டவில்லை - மத்திய அரசு தகவல்.

* உலகில் தொற்றா நோய்கள் காரணமாக இரண்டு வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

* ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், ரஷ்யாவையும், அதன் எல்லைகள் மற்றும் மக்களையும் பாதுகாக்க, அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: 3 இந்தியர்கள் அரை இறுதிக்கு முன்னேற்றம்.

* பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா கால் இறுதிக்கு தகுதி.

* இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

Today's Headlines


*1267 confirmed cases of H1N1 flu in Tamil Nadu: Health department plans to buy 6000 test kits

 * Online application for admission to MBBS and BDS courses in Tamil Nadu started yesterday.

* The Tamil Nadu Treasury and Accounts Commissioner has said that efforts are being made to connect women self-help groups and new entrepreneurs on the central government's 'Government E-Market' platform.

 *Alarm on rear seat belt should also be mandatory - Central Govt issues draft rules.

 *No Discrimination in Reservation to Economically Weaker Sections - Central Govt.

 *According to the World Health Organization, one person dies every two seconds due to infectious diseases.

 *Russian President Vladimir Putin has warned Western countries that they will not hesitate to launch a nuclear attack to protect Russia, its borders and its people if it threatens Russia's security.

 *International squash tournament: 3 Indians advance to semi-finals

* Pan Pacific Open tennis: Spain's Mukuruja qualifies for quarter-finals

* India won the second T20 against England Women by 88 runs.

 
 Prepared by

Covai women ICT_போதிமரம்